ஹிஜாப் விவகாரம் ஓய்ந்த நிலையில் 5,000 மாணவிகளின் உடலுக்குள் விஷத் தன்மை வந்தது எப்படி?… ஈரானில் மீண்டும் போராட்டம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈரானில் ஹிஜாப் விவகாரம் ஓய்ந்த நிலையில் தற்போது 5,000 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இவ்விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் பலர் அடுத்தடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் மாணவிகளின் உடலில் நஞ்சுத்தன்மை (விஷம்) இருந்தது தெரிந்தது.
மத அடிப்படைவாதிகளால் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. சர்வதேச அளவில் இவ்விவகாரம் பேசப்பட்ட நிலையில், தற்போது ஈரான் அரசு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கிடையே ஈரான் கல்வி அமைச்சகம் முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அரசுக்கு எதிராக ேபாராட்டங்களை நடத்தினர். ஏற்கனவே முஸ்லீம் பெண்கள் அணியும் ஹிஜாப் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரான் அரசை முடக்கிய நிலையில், தற்போது மாணவிகளுக்கு விஷம் கொடுத்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
இதுகுறித்து ஈரானின் துணை உள்துறை அமைச்சர் மஜித் மிராஹ்மதி கூறுகையில், ‘நாடு முழுவதும் 230 பள்ளிகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த கொடூர செயல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. நச்சுத்தன்மை கொண்டு அபாயகரமான பொருட்களை உற்பத்தி செய்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானின் 31 மாகாணங்களில் 25 மாகாணங்களில் இந்த விவகாரம் பரவியுள்ளது. வாயு, பவுடர், பேஸ்ட், திரவ வடிவில் கொடுக்கப்பட்டதாக என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கான பள்ளிகளை மூட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இதுபோன்ற கொடூர செயல்கள் அரங்கேற்றப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். இதற்கிடையே மேற்கண்ட விவகாரத்தில் வெளிநாட்டு சதி உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.