பணத்திற்காக சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குச் செல்வதாக வரும் போலிச் செய்திகளை உருவாக்கி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார் எனவும், எதிர்க்கட்சியின் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 2000 இலட்சம் வழங்கி பணத்துக்கேனும் தம் பக்கம் பெறுவதற்கு பேரம் பேசும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு பணமில்லாத இந்த அரசாங்கம், அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக்கொள்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து முயற்சித்தாலும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பணமில்லாமல் எதிர்க்கட்சியுடன் இணைய தயாராக உள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பணத்திற்காக தமது சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு 6 மாத கால வயதான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 54 ஆசனங்களை வழங்கி தேர்தல் வரலாற்றில் சாதனை படைக்க இந்நாட்டு மக்கள் உதவினார்கள் எனவும், எனவே 2000 இலட்சம் அல்லது அதற்கு மேல் கொடுத்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சலுகைகளுக்காகவோ வரப்பிரசாதங்களுக்காகவோ தங்கள் சுயமரியாதையை இழக்க மாட்டார்கள் எனவும், மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2000 இலட்சம் அல்ல 50000 கோடியேனும் இரைத்து முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரை தன் பக்கம் இணைத்துக்கொள்ளுங்கள் பார்ப்போம் என தான் அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாகவும், இவ்வாறு மக்களுக்கு துரோகம் இழைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறு இணைத்துக் கொள்வதற்கு பணமாக கருப்புப் பணமும்,பண்டோரா பத்திர பணமுமே பயன்படுத்தப்படுவதாகவும், இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கம் சகல பக்கத்தாலும் மக்களை துரத்தித் துரத்தி தாக்கி வருவதாகவும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமும், வரிகளை அதிகரிப்பதன் மூலமும், வட்டி வீதத்தை அதிகரிப்பதன் மூலமும் மக்கள் நசுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி அரசியலமைப்பை மீறி தேர்தலை சீர்குலைத்து வருவதாகவும்,அதையும் தாண்டி,புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்து தொழிற்சங்க தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்களையும் சாதாரண மக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
தெஹிவளையில் நேற்று (31) மாலை இடம்பெற்ற வட்டார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்