
தமிழகத்தில் புதிதாக 198 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: இந்தியா முழுவதும் 3038 பேர் பாதிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | சென்னை) – தமிழகத்தில் புதிதாக 198 பேருக்கு செவ்வாய்க்கிழமையன்று (ஏப்.4) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்,தொற்று பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்புகள் சீராக குறைந்த வந்தநிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு இரண்டு சதவீதம் ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமையன்று மேலும் 198 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 19 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.
இதனிடையே, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 3,038 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,179 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.