விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒத்துக்கொண்ட பிள்ளையான்?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு, மாசிவன்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஐஸ் தொழிற்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கு முறையான அனுமதிகள் பெறப்படவில்லை எனவும் குறித்த திட்டங்களுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாசிவன்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஐஸ் தொழிற்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கு முறையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
குறித்த கட்டுமானப் பணிகள் அரசியல்வாதி ஒருவரின் சகோதரனுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் குறித்த கட்டுமானப் பணிகள் அரசியல் பலத்தினால் பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட கட்டுமானப் பணிகளுக்கு பொறுப்பான திணைக்களங்கள் எவ்வாறு செய்பட்டுள்ளன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
மேலும் எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாமல் சட்டங்களை மதிக்காமல் குறித்த கட்டுமானப் பணிகளுக்கு அனுமதியளிக்க முடியாது.
அத்துடன் அரசியல் அழுத்தங்களைப் பிரயோகித்து இவ்வாறான கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அபிவிருத்திக் குழுக்கூட்டம் என்பது மக்களது நலன் சார்ந்தே முன்னெடுக்கப்படுகின்றது. எனவே மக்களுக்கு நாம் பொறுப்புக் கூறவேண்டும்.
ஒரு பிரதேசத்தின் வளங்கள் பாதிக்கப்படாதவாறுதான் அபிவிருத்திகளோ அல்லது தொழிற்சாலைத் திட்டங்களோ மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் சூழலுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
ஆனால் மட்டக்களப்பினைப் பொறுத்தவரையில் சில அபிவிருத்தி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் காரணமாக பல பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன.
முக்கியமாக அரசியல்வாதி ஒருவரின் சகோதரன் மேற்கொள்ளும் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அரசியல் செல்வாக்கு பிரயோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களையும் உள்ளடக்கிய ஒரு விசேட குழு நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே இவ்விடயம் குறித்து ஆராய முடியும். உரிய அனுமதிகள் பெற்று நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இதேபோன்று எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்படுவது தொடர்பாகவும் பல சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றன. ஆனால் எந்த அபிவிருத்தித் திட்டங்கள் என்றாலும் உரிய அனுமதிகள் வழங்கப்பட்ட பின்னரே முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதில் எந்த அரசியல் தலையீடுகளையும் அனுமதிக்க முடியாது. மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கும் இந்தப் பொறுப்பு இருக்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் கதைப்பதற்கு முடியாது. ஏனெனில் தனிப்பட்ட விரோதங்களை பாராளுமன்றத்தில் கதைப்பதாக கூறுவார்கள்.
எனவே இவ்வாறான அரசியல் தலையீடுகளை அனுமதிக்கப் போவதில்லை. மக்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டிது எமக்கு அவசியமாகும்.
இவ்விடயம் தொடர்பாக சுற்றுச்சூழல் அதிகார சபை உள்ளிட்ட அனைத்து திணைக்களங்கள் மற்றும் பிரதேச சபை உள்ளிட்டவையே பொறுப்புக் கூறவேண்டும்.
எனவே இவ்விடயத்தில் பொறுப்புக் கூறவேண்டிய இடத்தில் உரிய திணைக்களங்கள் மற்றும் பிரதேசசபை அதிகாரிகளே காணப்படுகின்றனர்.
அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள், தொழிற்சாலைகள் எதுவாக இருந்தாலும் முறையான அனுமதிகள் பெறப்பட்டதன் பின்னரே அவற்றின் கட்டுமானம் உள்ளிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மக்கள் நலனிற்குப் பாதகமான திட்டங்கள் குறித்து விசேடமாக ஆராயப்பட வேண்டும். எனினும் அரசியல் அழுத்தங்களைப் பிரயோகித்து எந்தத் திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதிக்க முடியாது.
இவ்விடயம் தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட வேண்டும்.
குறித்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு வியாபார அனுமதிப்பத்திரம் மற்றும் சுற்றுச்சூழல் அதிகார சபை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை உள்ளிட்ட திணைக்களங்கள் உள்ளிட்டவை பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
சாதாரணமாகப் பின்பற்றப்படும் நடைமுறைகள் அனைத்துத் திட்டங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். வெறுமனே அரசியல் அழுத்தங்களுக்குப் பயந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.
குறித்த ஐஸ் தொழிற்சாலை உள்ளிட்ட முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்படுவதென்பது உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே இந்த விடயத்தில் விசேட குழு ஒன்றினை அமைத்துச் செயற்பட வேண்டுமென நான் வலியுறுத்துகின்றேன்.
இந்த நிலையில் குறித்த தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் அறிக்கை ஒன்று உரிய திணைக்களங்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வெறுமனே அரசியல் பலத்தைக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.
நான் தனிப்பிட்ட ரீதியில் எவரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால் மக்களது நலன்களுக்கு எதிரான சுற்றுச் சூழலிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை அனுமதிக்கப் போவதில்லை.
நாம் எந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. எந்த அரசியல்வாதிகளுக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் நடைமுறைகளுக்கு அப்பால் சென்று முன்னெடுக்கப்படும் முறையற்ற திட்டங்கள் முதலீடுகளை அனுமதிக்கப் போவதில்லை.
அத்துடன் நாம் எந்த அரசியல் அழுத்தங்களையும் பிரயோகிக்கப்போவதும் இல்லை. எனவே இந்த விடயங்களுக்கு ஒரு ஒருங்கிணைப்புக் குழுவினை ஏற்படுத்தி இவ்விடயம் தொடர்பாக ஆராய வேண்டும்.
அத்துடன் குறித்த விடயங்கள் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதையே நான் இங்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.