போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்!

போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் கோயபல்ஸைப் பயன்படுத்தி ஊடகங்கள் மூலம் பொய்களை பரப்பி சமூகமயப்படுத்தியது போன்று தற்போதைய இலங்கை ஜனாதிபதியும் பொய்ப் பிரச்சாரம் செய்யும் கூட்டு அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) தெரிவித்தார்.

உண்மையான ஊடகவியலாளர்களை கூட இழிவுபடுத்தி, தங்களை ஊடகவியலாளர்கள் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவின் மூலம் உண்மைகளை பொய்யாகவும், பொய்களை உண்மையாகவும் மாற்றும் பெரும் பிரச்சாரம் செயற்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ள,அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியதாக தற்போதைய அரசாங்கம் பொய்யான செய்திகளை உருவாக்கி வருகிவதாகவும், மக்கள் ஆணை இல்லாத, மக்களால் நிராகரிக்கப்பட்ட தற்போதைய அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணையாது எனவும், எனவே இவ்வாறான பொய்யான மற்றும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் பதவி தொடர்பாகவே அல்லது தேசிய அரசாங்கம் தொடர்பாகவே அல்லது அமைச்சுப் பதவிகள் தொடர்பாகவோ தானோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோ எந்தவித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ´கோயபல்ஸ் கொள்கையை´ கடைப்பிடித்து பெரும் போலி ஊடக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு பயமெனவும், முடியுமானால் கிட்டிய காலத்தில் பாராளுமன்ற தேர்தலையோ அல்லது ஜனாதிபதி தேர்தலையோ அல்லது தற்போது நிதி ஒதுக்க நழுவி வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையோ நடத்துமாறு தான் தற்போதைய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறு தேர்தலை நடத்தும் போது உண்மையான மக்கள் ஆணை எங்குள்ளது என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் வாக்குரிமைக்கு பெறுமானம் சேர்க்கும் விடயத்தில் என்றும் முன்நிற்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் ஆணையற்ற தற்போதைய அரசாங்கத்துடன் பணத்துக்கும் சலுகைகளுக்கும் அமைச்சுப் பதவிகளுக்கும் விலைபோகும் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியிலோ இல்லை எனவும், என்றும் மக்கள் ஆணையே உயர்வானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்