சமூக ஐக்கியத்துக்கான சந்தர்ப்பங்களை தவறவிடமால் பயன்படுத்தும் சிறந்த தினம் “ஈதுல் பித்ர்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

சமூக ஐக்கியத்துக்கான சந்தர்ப்பங்களை தவறவிடமால் பயன்படுத்தும் சிறந்த தினம் “ஈதுல் பித்ர்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நோன்புப் பெருநாளின் சௌபாக்கியங்கள் சகல முஸ்லிம் சகோதரர்களதும் வாழ்வில் மகி்ழ்ச்சியை ஏற்படுத்தப் பிரார்த்தித்து, வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புனித நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

“இறையியல் கோட்பாடுகளி்ல் உன்னத இலட்சியமுடையது புனித நோன்பு. இந்த அருள்மிகு மாதத்தை அல்லாஹ்வின் திருப்தியுடன் கழிக்கக் கிடைத்தமைக்கு முதலில் நாம் அவனுக்கு நன்றி செலுத்துவோம். இறைவனின் திருப்திக்காக மட்டுமே நாம் நோன்பு நோற்றோம். பாவக்கறைகளைப் போக்குவதற்கு நாம் செய்த நல்லமல்களை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக..!

ரமழான் தந்த பயிற்சியுடன் எதிர்வரும் காலங்களில் ஒரு வரையறைக்குள் வாழப்பழகுவோம். இந்நன்னாளில் சகோதர வாஞ்சையுடன் பழகி, சகலரையும் சந்தோசப்படுத்துவோராக முஸ்லிம்கள் மாற வேண்டும். கடந்த காலங்களை விடவும் இனி எமது எதிர்காலம் முன்னோக்கி நகர வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் இழுத்தடிக்கப்படாத புதிய யுகம் ஒன்று உருவாக நாம் இந்தப் பெருநாள் தினத்தில் பிரார்த்திப்பது அவசியம்.
எந்த விடயமானாலும் எல்லோரும் திருப்திப்படும் வகையில் அமைவதுதான் சமூக ஐக்கியத்துக்கு வலுச்சேர்க்கும். இந்த ஐக்கியத்தை அடித்தளமாகக் கொண்டுதான் எமது எதிர்கால செயற்பாடுகள் இருக்கும்.

அனைவருக்கும் “ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.