வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஓரணியாக தமது பேராதரவைத் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் தெளிவான செய்தியை எடுத்துரைப்பதற்கு மக்கள் தமது இயல்புவாழ்வை நிறுத்தி ஹர்த்தாலுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடவேண்டும், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்தமயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுகின்றது.
“வடக்கு – கிழக்கில் அரசின் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும் அரசு கொண்டு வரத் தீர்மானித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவுக்கு எதிராகவும் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தமிழ் – முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.