வெடுக்குநாறி மலைக்கு மக்கள் சுதந்திரமாக சென்று வர வேண்டும் என்பதே  தீர்ப்பு – சுமந்திரன்

வெடுக்குநாறி மலைக்கு மக்கள் சுதந்திரமாக சென்று வர வேண்டும் என்பதே தீர்ப்பு – சுமந்திரன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்குநாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்படவேண்டும் என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

வெடுக்குநாறி மலைக்கு இன்றையதினம் விஜயம் செய்த அவர் ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பார்வையிட்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட பின்னர்.கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆலயம் தொடர்பாக நீதிமன்றில் இரு கட்டளைகள் வழங்கப்பட்டதற்கிணங்க அந்த விக்கிரகங்கள் மீளவும் பிரதிஸ்டை செய்யும் செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எனவே நீதிமன்றில் தவறான கருத்துக்கள் ஏதும் சொல்லப்பட்டால் அதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்றையதினம் நேரிலே ஆலயத்திற்கு சென்று விடயங்களை அவதானித்துள்ளோம். இது ஒரு மகிழ்ச்சியான விடயம்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களின் அடையாள அட்டைகள் பதிவுசெய்யப்பட்டமை தேவையற்ற ஒரு விடயம். இன்றையதினம் அவ்வாறான நடவடிக்கை இடம்பெறவில்லை. பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்வதற்கு இடமளிக்க வேண்டும் என்பதே நீதிமன்றின் கட்டளையாக இருக்கின்றது.

அதனை மதித்து அனைத்து அரச உத்தியோகத்தர்களும் செயற்பட வேண்டும். செயற்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார்