விதி மீறலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட மொயின் அலி – சம்பளத்தில் 25 சதவீதமும் குறைப்பு..!

விதி மீறலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட மொயின் அலி – சம்பளத்தில் 25 சதவீதமும் குறைப்பு..!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது வலது கையை உலர்த்துவற்கு நடுவர்கள் அனுமதியின்றி உலர்த்துவதற்கான திரவத்தை கையில் தெளித்த மொயீன் அலிக்கு அவரது இந்த போட்டிக்கான சம்பளத்தில் 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டத்தின் 89-வது ஓவரின் போது எல்லைக் கோட்டுக்கு அருகில் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த மொயீன் அலி தனது வலது கையில் நடுவர்கள் அனுமதியின்றி உலர்த்துவதற்கான திரவத்தை ஸ்பிரே செய்து ஆட்டத்தின் அடுத்த ஓவரை வீச வந்துள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி ஐசிசியின் சட்டவிதி 2.20-ஐ மீறியுள்ளார்.

இந்த விதி வீரர் ஒருவர் ஆட்டத்தின் மாண்பினை வழுவாது சரிவர கடைபிடித்து விளையாட வேண்டும் எனக் கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலிக்கு அவரது இந்த ஆட்டத்தின் சம்பளத்தில் 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஒழுக்கப் புள்ளியில் மொயீன் அலிக்கு ஒரு புள்ளி குறைக்கப்படுகிறது. கையினை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்பிரே பந்தில் உபயோகப்படுத்தப்படாததால் அது பந்தின் தன்மையை மாற்ற வாய்ப்பில்லை.

விதி 41.3-ன் படி பந்தின் நிலையை மாற்றி அந்த பந்தில் ஆட்டம் தொடரப்பட்டால் அது விதிமீறலாகும் எனக் கூறப்பட்டுள்ளது. மொயீன் அலி விதி மீறலில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டதால் அவர் இது தொடர்பாக எந்த ஒரு விளக்கத்தையும் ஐசிசிக்கு அளிக்க முன்வரவில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் ஐசிசி கிரிக்கெட் விதிமீறலுக்காக மொயீன் அலிக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.