லங்கா பிரீமியர் லீக்கின் சூதாட்டம் பெயர் பொறித்த சீருடையுடன் விளையாட பாபர் அஸாம் மறுப்பு..!
பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் பாபர் அஸாம், பந்தய நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட சீருடையை அணிந்து விளையாடுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்கேற்கும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தலைவராக விளையாடுவதற்கு பாபர் அஸாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பந்தய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதன் காரணமாக, குறித்த நிறுவனத்தின் பெயரை அணி வீரர்களின் சீருடையில் பொறிக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். எனினும் தற்போது ஹஜ் யாத்திரை முடித்து நாடு திரும்பியுள்ள பாபர் அஸாம், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரத்திற்கு தான் துணை போக முடியாது என கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார். இதேவேளை, பாபர் அஸாமின் இத் தீர்மானத்தை தாம் மதிப்பதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அஸாம் மற்றும் முகமட் ரிஸ்வான் ஆகியோர் இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்றிருந்தனர். தற்போது ஹஜ் முடிந்து நாடு திரும்பியுள்ள இருவரும் அணியின் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.