பல மாவட்டங்களில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்..!
சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விடப்படுவதால் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் சமனல குளத்தின் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலிருந்து விடுபட மாற்று மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடியாத பல மாவட்டங்களில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இன்று (08) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர் தெரிவித்தார்.
அங்கும் அவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
“ஆகஸ்ட் 16ஆம் திகதி சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் இருந்து மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படும். இது முற்றாக நிறுத்தப்பட்டால், மாற்று மின்சாரத்தை கொள்வனவு செய்யாவிட்டால் மாத்தறை மாவட்டம், காலி, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூன்று மணி நேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
மின்சாரத்தினை கொள்வனவு செய்யவில்லை என்றால், பகலில் ஒரு மணி நேரம், இரவில் இரண்டு மணி நேரம் என மின்துண்டிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே நாங்கள் கோரிக்கை விடுத்தோம் மின்சாரத்தை துண்டிக்க முடியாது என்று..
மின்சாரத்தை கொள்வனவு செய்தால் தென் மாகாணத்துடன் இணைக்கக்கூடிய மூன்று மின் உற்பத்தி நிலையங்களே எங்களிடம் உள்ளன. அந்த மூன்றுக்கும் நாம் அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும். எங்கள் பகுதியில் இருந்து தண்ணீரை விடுவிக்காதவிடத்து, மின் உற்பத்திக்கு பிரச்சினை இல்லை.
தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஆகஸ்ட் 15 முதல் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத்தினை கொள்வனவு செய்ய வேண்டும்…”