தனஞ்சயவின் சுழலில் வீழ்ந்த B Love Kandy..!

தனஞ்சயவின் சுழலில் வீழ்ந்த B Love Kandy..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தனஞ்சய டி சில்வாவின் அபார பந்துவீச்சு மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ, பென் மெக்டெர்மட், சதீர சமரவிக்ரம ஆகியோரது துடுப்பாட்டம் என்பவற்றின் உதவியுடன் பி-லவ் கண்டி அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தம்புள்ள ஓரா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

LPL தொடரில் இன்று (14) இரவு நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் பி-லவ் கண்டி மற்றும் தம்புள்ள ஓரா அணிகள் மோதின. கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பி-லவ் கண்டி அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்க முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய தம்புள்ள ஓரா அணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ – சதீர சமரவிக்ரம ஜோடி அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தனர். இதில் சமரவிக்ரம 31 ஓட்டங்களுடனும், அடுத்து களமிறங்கிய லக்ஷான் எதிரிசிங்க 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைச் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவிஷ்க பெர்னாண்டோவும் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய பென் மெக்டெர்மட் அதிரடியாக ஆடி 2 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 37 ஓட்டங்களையும், ஹெய்டன் கெர் 26 ஓட்டங்களையும் எடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் தம்புள்ள ஓரா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது. கண்டி அணி தரப்பில் நுவன் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், முஜிப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனையடுத்து களமிறங்கிய கண்டி அணி ஆரம்பம் முதலே சற்று தடுமாற்றத்துடனே விளையாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பக்கர் ஜமான் 8 ஓட்டங்களுடனும், மொஹமட் ஹரிஸ் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வனிந்து ஹஸரங்க 19 ஓட்டங்களுடனும், அஞ்செலோ மெதிவ்ஸ் 26 ஓட்டங்களையும் எடுத்து வெளியேறினர். அவரைத் தொடர்ந்து, சதுரங்க டி சில்வாவும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், நிதானமாக ஆடிய தினேஷ் சந்திமால் 46 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் பி-லவ் கண்டி அணி, 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் தம்புள்ள ஓரா அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தம்புள்ள அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய தனஞ்சய டி சில்வா 2 ஓவர்களில் 6 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். T20i போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சு பிரதி இதுவாகும். மறுபுறத்தில் பிரமோத் மதுஷான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

4 விக்கெட்டுகளை வீழ்த்திய தனஞ்சய டி சில்வா போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

இதனிடையே, கண்டியை வீழ்த்தியதன் மூலம் இம்முறை போட்டித் தொடரில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை எடுத்து தம்புள்ள ஓரா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள, பி-லவ் கண்டி அணி 4ஆவது தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்தது.