நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரவரிசையில் வீழ்ச்சி..!
இலங்கையில் உள்ள 05 முக்கிய பல்கலைக்கழகங்களும் சர்வதேச தரவரிசையில் வீழ்ச்சியடைந்துள்ளன.
சமீபத்திய சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைகளின்படி, கொழும்பு, பேராதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, ருஹுணு மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்கள் சர்வதேச வகைப்படுத்தலில் இவ்வாறு வீழ்ந்துள்ளன.
தற்போதுள்ள நிலைமை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அமைப்பில் இருந்து வைத்தியர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளியேறியமையே இந்த நிலைக்கு காரணம் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் பல்கலைக்கழக அமைப்பின் தரம் வீழ்ச்சியடைந்து வருவதாக சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்தார்.
மேலும், நாட்டை விட்டு வெளியேறும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தற்போது பல்கலைக்கழக அமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சுமார் ஐம்பது வீத விரிவுரையாளர்கள் வெற்றிடமாக இருக்கலாம் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
100 வீதமான வைத்தியர் வெற்றிடங்களை நிரப்ப முடியாவிட்டாலும், வைத்தியர் பற்றாக்குறையை ஏதாவது ஒரு மட்டத்தில் நிவர்த்தி செய்வது அவசியமானது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னேற்றம் தொடர்பில் கோப் குழுவில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.