சாய்ந்தமருதில் மர்ஹூம் மாமனிதர் அஷ்ரபிற்கு கத்தம் ஓதி, ரவூப் ஹக்கீம் சாதிக்க நினைப்பது என்ன..?
மருதூரில் ஒரு கத்தம் …
இன்று 16-09-2023 ம் திகதி மறைந்த மா தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவாக பௌசி மைதானத்தில் ஒரு கத்தமுல் குர்ஆன் தமாம் செய்யப்பட விருக்கின்றது என்கின்ற செய்தி முகநூலில் பலவிதமான தலைப்புக்களுடன் பகிரப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்வானது நாம் எல்லோரும் அறிந்தபடி எமது மார்க்கத்துடன் இணைந்த ஒரு சடங்கு என்று கொண்டாலும், இதில் கலந்திருக்கின்ற அரசியல் எம்மை அருட்டுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்கின்ற கட்சியின் தலைவர் இந்த நிகழ்வின் மூலம் எதனை சாதிக்க நினைக்கின்றார் என்பது ஓர் இரகசியமான விடயமல்ல. தலைவர் அஷ்ரப் இனை முன்னிறுத்தி சாய்ந்தமருது மக்களுடைய மனங்களை வென்று விட முடியும் என்று அவர் நினைப்பாரேயானால் அது வெறும் மனப்பாலே தவிர வேறெதுவுமல்ல.
தலைவர் அஷ்ரப் என்பவர் சாய்ந்தமருது மக்களை ஆகர்ஷித்த ஒரு தலைவர் அல்ல என்கின்ற உண்மையை சகோதரர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உணர வேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சாய்ந்தமருதில் வலுப்பெற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அந்தக் கட்சி உருவாகும் பொழுது நாட்டிலும் பிரதேசத்திலும் இருந்த அரசியல் சூழ்நிலை, மக்களின் அச்சம், தங்களை சூழ்ந்திருந்த ஆபத்துகளுக்கு மத்தியிலும் அந்தக் கட்சியை வளர்த்தெடுப்பதில் முன்னின்று செயற்பட்ட மருதூர் போராளிகள், அவர்களை நெறிப்படுத்திய மஜீத், நிஜாமுதீன், ஆதம்பாவா போன்ற மாகாண சபை உறுப்பினர்களது தியாகம் இவைகள்தான் மருதூர் எஸ் எல் எம் சியின் வளர்ச்சிக்கு உரங்களாகின. இவை தவிர்த்து தலைவர் அஷ்ரப் அவர்களை முன்னிறுத்தி மருதூரில் அந்தக் கட்சி வளரவில்லை.
தலைவர் அஷ்ரப் எல்லா ஊர்களிலும் அறியப்பட்ட, துணிச்சல் மிக்க தலைவர் என்கின்ற அடிப்படையில் மருதூர் மக்களும் அவர் பின்னால் அணி திரண்டார்கள். இதனைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று விபரமாக விளக்கி சகோதரர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் ஒரு விண்ணப்பத்தைக் கூட 2016 ம் ஆண்டில் அவரது வீட்டில் வைத்து வேண்டுகோளாக முன்வைத்திருந்தேன். ஆனால் அவர் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.
தலைவர் அஷ்ரப் அவர்கள் சாய்ந்தமருத்துக்கான பிரதேச செயலக விடயத்தில் காட்டிய தயக்கம் அந்த மக்களை அவர் பற்றிய விம்பத்தினை மாற்றிக் கொள்ளும்படி ஆக்கியிருந்த ரகசியம் சகோதரர் ஹக்கீம் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தனது தசையில் இருந்து ஒரு துண்டை வெட்டிக் கொடுப்பது போன்றுதான் தலைவர் அஷ்ரப் அந்த அலுவலகத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் பிரதேச சபை ஒன்றினைக் கோரக் கூடாது என்கின்ற நிபந்தனையும் முன் வைக்கப்பட்டிருந்ததாக நான் அறிந்திருந்தேன்.
ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது, மருதூர் மக்கள் வளர்ச்சியில் முன்னோக்கிச் சென்று விட்டார்கள். ஒரே இடத்தில் தேங்கி நிற்கின்ற நிலையில் அவர்கள் இல்லை. இன்னுமொருவரிடம் கைகட்டி நிற்கின்ற மக்களாக அந்த மக்கள் நீடிக்க விரும்பவில்லை என்பதனை எத்தனையோ தடவைகள் நிதானமாகவும், மிதமாகவும், நேர்மையாகவும் முன் வைத்தார்கள். அவர்களின் கோரிக்கைகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராகிப் போன விடயம் மட்டும் மருதூர் மக்களை விசனமடையச் செய்யவில்லை, அந்த ஊரும் மக்களும் பள்ளிவாசலும் தலைவர் ஹக்கீம் அவர்களாலும் ஏனையோராலும் எள்ளி நகையாடப் பட்ட பொழுதுதான் அவர்கள் வீறு கொண்டெழுந்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள் சிறிது எல்லை மீறி விட்டார்கள் என்பதனை ஏற்றுக் கொண்டாலும் கூட, அந்த மக்களின் கோரிக்கை, அதில் உள்ள நியாயம், அவர்களின் மன உணர்வுகள் என எதனையுமே மதிக்காது, வசவுகளால் தூற்றிய தலைமை இன்று அதே ஊரில் தலைவர் அஷ்ரப் அவர்களை முன்னிறுத்தி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயற்சியெடுப்பது அயோக்கியத் தனம் என்றுதான் கணிப்பிட வேண்டும்.
இது வெறும் அரசியல் என்பதை அறிந்து கொள்வதற்கு ராக்கெட் விஞ்ஞானம் கற்க வேண்டியதில்லை.
தலைவர் அஷ்ரப் அவர்களின் கத்தமுல் குர்ஆன் நிகழ்வினை நடாத்துவதற்கு மிகவும் பொருத்தமான இடம் கல்முனைதான் என்பது சகோதரர் ஹக்கீமுக்கும் தெரியும், ஹரீஸுக்கும் தெரியும்.
சகோதரர் ஷிராஸ் மீராசாஹிப், ஹிஸ்புல்லா போன்றவர்களை முன்னிறுத்தி பின்னால் ஒழிந்து கொண்டு, தான் மருதூர் மக்களின் மனங்களில் விதைத்த ரணங்களையும் அதனால் ஏற்பட்ட வடுக்களையும் இல்லாமல் செய்து விடலாம் என்று சகோதரர் ஹக்கீம் அவர்கள் நினைப்பாரேயானால் அவர்மீது பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.
மக்களின் முன்னேற்றம் மட்டுமே அரசியல் தலைவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவிர, தங்கள் பதவிகளைத் தக்க வைப்பதோ, ஆதிக்கத்தை நிலைநாட்டுவதோ அவர்களின் இலக்காக அமையக் கூடாது.
இன்ஷா அல்லாஹ், களத்தில் சந்திப்போம்!
டாக்டர். நஜிமுதீன்