
பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி தனது உயிரை இழந்த கண்டி வைத்தியர்..!
கண்டி வைத்தியசாலையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வைத்தியர் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் இருந்த இரண்டு மாத கைக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடி பரிதாபகரமாக தனது உயிரை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
52 வயதுடைய பஹீமா சஹாப்தீன் கண்டி தேசிய வைத்தியசாலையில் தொண்டை, காது, மூக்கு தொடர்பில் பணியாற்றும் வைத்தியர்.
கண்டி, அனிவத்த பிரதேசத்தில் வசிக்கும் இவர், கொஞ்ச காலமாகவே உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பணியில் இருந்து சிறிது காலம் தற்காலிகமாக ஓய்வு எடுத்து வீட்டில் தங்கியிருக்குமாறும் வைத்தியர்களால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 9ம் திகதி கண்டி தேசிய வைத்தியசாலையில் அவர் பணியாற்றும் 4ம் வார்டிலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வருகின்றது.
அந்த அழைப்பில், அவர் பணியாற்றும் வார்டில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு மாத குழந்தை ஒன்றுக்கு உடல் முழுதும் திடீரென நீல நிறமாக மாறியுள்ளதாகவும் உடனே வைத்தியசாலைக்கு வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைப்புக் கிடைத்ததும் தனது உடல் நிலையினை கூட கவனிக்காது பஹீமா ஷஹாப்தீன், தனது கணவருடன் உடனே வைத்திசாலைக்கு புறப்பட்டுள்ளார்.
அதனால், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற குறித்த வைத்தியர் குழாமிற்கு இலகுவாக இருந்தது. பஹீமா ஷஹாப்தீனின் துரித வைத்திய ஆலோசனையின் கீழ் கம்பளையை சேர்ந்த நிலேஷ் குணசேகர எனும் இரண்டு மாத குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
எனினும், விதி வேறு விதமாக அங்கே விளையாடியது எனலாம். குழந்தையினை காப்பாற்றியதுடன் வைத்தியர் பஹீமா ஷஹாப்தீனின் உடல்நிலை யாரும் எதிர்பார்க்காதளவுக்கு மோசமாகியுள்ளது. உடனே அவர் கண்டி வைத்தியசாலையிலேயே அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு 10 நாட்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பஹீமா ஷஹாப்தீன், வைத்தியதுறையில் உலகிற்கே எடுத்துக்காட்டாக இருந்து கடந்த வார இறுதியில் இவ்வுலகை விட்டும் பிரிந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, மிகவும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவரது தலையில் நரம்பு சிதைந்ததன் விளைவாக ஏற்பட்ட உட்புற இரத்தப்போக்கு காரணமாக வைத்தியர் பஹீமா சஹாப்தீன் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் அவரது கணவர் எம்.அஸ்லம் தெரிவிக்கையில்;
“.. வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு காரணமாக இவர் ஓய்வில் இருந்தாலும் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி தேவைகள் ஏற்படும் போதும் வைத்தியசாலைக்கு சென்று வருகிறார். அன்றும் அழைப்பு வர அவர் உடனே புறப்பட ஆயத்தமாக இருந்தார். நான் உடல் நிலை குறித்து விசாரித்தேன். நலமாக உள்ளதாக தெரிவித்தார். அன்று வாகனத்தினை நான் தான் ஓட்டிச் சென்றேன். அவர் சிகிச்சைக்கான குழந்தையின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்தார். மறுநாள் சத்திர சிகிச்சைக்கு தேவையான நிலுவையில் உள்ள நோயாளர்களது பெயர் பட்டியலை கூட சரிபார்த்து என்னிடம் தந்து அதனை உரியவர்களிடம் கொடுக்குமாறும் தெரிவித்திருந்தார். எப்போதும் நோயாளர்களது யோசனையிலேயே இருப்பார். மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர்..”