இன்றைய போட்டியில் விளையாடக்கூடிய இலங்கை அணி..!

இன்றைய போட்டியில் விளையாடக்கூடிய இலங்கை அணி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் மூன்றாவது போட்டி இன்று (16) இலங்கை நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ளது.

லக்னோ கிரிக்கட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளதோடு, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் விளையாடிய கடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தன.

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் வழக்கமான தலைவர் தசுன் ஷானக காயம் காரணமாக கிரிக்கட் அணியில் இருந்து விலகியதுடன், அணியை வழிநடத்தும் பொறுப்பு துணைத் தலைவர் குசல் மெண்டிஸ்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஷானகவின் காயம் குணமடைய ஏறக்குறைய மூன்று வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சகலதுறை ஆட்டக்காரர் சாமிக்க கருணாரத்ன தசுன் ஷானகவின் பற்றாக்குறையை நிரப்ப அணியில் இணைந்துள்ளார்.

எவ்வாறாயினும், உலகக் கிண்ண காலப்பகுதியில் தசுன் ஷானக்க கிரிக்கட் அணியுடன் தொடர்ந்தும் இருப்பார் என அணியின் முகாமையாளர் மஹிந்த ஹலங்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவுக்கும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என நம்பப்படுகிறது.

இன்று விளையாடும் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தசுன் ஷானக்கவுக்குப் பதிலாக துனித் வெல்லாலகே 7வது இடத்தில் பெயரிடப்படவுள்ளதோடு, பெற்றுள்ளதுடன், சாமிக்க கருணாரத்ன 8வது இடத்துக்குப் பெயரிடப்பட வாய்ப்புள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார, மதீஷ பத்திரன அணியில் இணைவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இலங்கை ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் 26வது தலைவராக பெயரிடப்பட்டுள்ள குசல் மெண்டிஸ், இன்றைய போட்டியில் இலங்கை அணியை தீர்மானிக்கும் காரணியாக இருப்பார்.

உலகக் கிண்ணப் போட்டிகளில் இன்னும் அரைசதம் அடிக்காத குசல் ஜனித் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இந்தப் போட்டியில் மற்றைய தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பார்கள்.

இன்னும் வெற்றியைத் தேடிக்கொண்டிருக்கும் ஸ்டார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சுக்கு பலமான சவாலாக மாறக்கூடிய தனஞ்சயவும், ஆரம்பத்திலேயே ஸ்கோர்போர்டை அதிகரிக்கக் கூடிய குசல் ஜனித்தும் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவர்கள்.

இன்றைய போட்டியில் விளையாடக்கூடிய (யூகிக்கப்பட்ட) இலங்கை அணி –

குசல் ஜனித் பெரேரா
பெத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ் (கேப்டன்)
சதீர சமரவிக்ரம
சரித் அசலங்க
தனஞ்சய டி சில்வா
துனித் வெள்ளாலகே
சாமிக்க கருணாரத்ன
மகேஷ் தீக்ஷனா
லஹிரு குமார
தில்ஷான் மதுசங்க