இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்பு..?

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்பு..?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலியர்களும், பலஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழ நீண்ட கால தீர்வை நோக்கி முன்னேறும்படி அமெரிக்க ஐனாதிபதி பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 4 நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டள்ளனர். இந்நிலையில் மேலும் சில பணயக் கைதிகளை விடுவிக்க, போர் நிறுத்தம் இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாமென தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க ஐனாதிபதி ஜோ பைடன், ‘இஸ்ரேல், பலஸ்தீன மக்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை வழங்க, இருதரப்பினருக்கும் சரிசமமான சுதந்திரம், மாண்பை உறுதி செய்ய வேண்டும். அதுவே தீர்வாகும். இந்த இலக்கை எட்டும்வரை அமெரிக்கா ஓயாது’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று(27) இஸ்ரேலியப் பணயக் கைதிகள் 50 பேரும், சிறைபிடிக்கப்பட்ட பலஸ்தீனியர்களில் 150 பேரும் விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபருடன் பேசியபோது, ‘ஹமாஸ் விடுவிக்கும் 10 இஸ்ரேலியப் பணயக் கைதிகளுக்கும் மாறாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்’ என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதேவேளையில் பணயக் கைதிகளை விடுவித்த பின்னர் மீண்டும் இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக காஸா பகுதிக்கு பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அங்கிருந்த வீரர்களுடன் ஆலோசித்த பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் ‘இஸ்ரேல் நிச்சயம் அனைத்துப் பணயக் கைதிகளையும் மீட்டுக் கொண்டுவரும். அந்த முயற்சியில் நம்மை எதுவும் தடுக்காது’ என்று கூறியமை குறிப்பிடத்தக்கது.