
நீரை விற்கவோ, தனியார்மயமாக்கவோ எந்தவித திட்டமும் இல்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரச – தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை என்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிலைபேற்றுத் தன்மையைப் பேணுவதற்கு நீர்க் கட்டணங்களுக்கென சூத்திரம் ஒன்று அவசியப்படுவதாகவும், அதற்கான சூத்திரத்தை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
தோட்ட உட்கட்டைமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக மலையக மக்களுக்கு காணி உரிமையை வழங்க 04 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, பெருந்தோட்ட மேம்பாட்டுக்காக 89 பிரதேச செயலகங்களுக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அதனை நாம் வரவேற்கின்றோம். மக்களுக்கு மிக அவசியமான விடயங்களை மேற்கொள்வதற்காக அந்த நிதி பிரதேச செயலகங்கள் ஊடாக செலவிடப்படும். இதில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது. இந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்காக அமைச்சரவை மூலம் குழுவொன்று நியமிக்கப்படும்.
அதன்படி, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சைப் பொறுத்தவரை, 14 பில்லியன் ரூபா ஜனாதிபதியிடம் இருந்து நேரடியாக கிடைக்கின்றது. அதனுடன் 05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு அமைச்சின் ஊடாகக் கிடைக்கின்றது. மேலும், 10,000 வீட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி மூலம், 63 smart class room வேலைத் திட்டத்தையும் ஆரம்பிக்க இருக்கின்றோம்.
நீர் வழங்கல் செயற்பாடுகளுக்கு அதிகமான வலுசக்திச் செலவுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. புதுப்பித்தக்க வலுசக்தி ஆற்றலை நீர் வழங்கல் துறையில் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 324 நீர் வழங்கல் நிலையங்களில் ( pumping station) இதுவரை 06 நிலையங்களில் மாத்திரமே சூரிய சக்தி பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய அனைத்தும் மின்சாரத்தில் இயங்குகின்றன. இதனால்தான் மின்கட்டணத்தை அதிகரிக்கும் போது நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியேற்பட்டது.
எனவே சூரிய சக்தியைப் பயன்படுத்தவது குறித்து வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 03 ஆண்டுகளில் இதனை 25% இனால் அதிகரிக்கவும் 2030 ஆம் ஆண்டுக்குள் 50 % சூரிய சக்தியை நீர் வழங்கல் துறையில் பயன்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம். அதற்கு சுமார் 8507 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக தனியார் துறையின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.’ என்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்