பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது பிரமாண்டமான மாநாடு எதிர்வரும் 15ம் திகதி நடைபெறும் – நாமல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாடு பிரமாண்டமான முறையில் மற்றும் பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாட்டை எதிர்வரும் 15ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அன்றைய தினம் மதியம் ஒரு மணிக்கு பொது மாநாடு ஆரம்பமாகவுள்ளது. அதற்காக கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருவார்கள்.
இலங்கை வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியாக, அடிமட்ட மட்டத்தில் உருவாக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் பல பெரிய சாதனைகளைப் படைத்தது.
மக்களிடம் சென்று மக்கள் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடிந்த கட்சியாக பொதுஜன பெரமுன கட்சியை சுட்டிக்காட்டலாம். அத்துடன், ஒரு அரசியல் கட்சியாக இலங்கை வரலாற்றில் மிகவும் பயங்கரமான, சவாலான பொருளாதார மற்றும் சமூக காலகட்டத்தை எதிர்கொண்ட அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கூற முடியும்.
குறிப்பாக கீழ் மட்டத்தில் தொடங்கப்பட்ட இளம் அரசியல் கட்சியாக, புதிய முகத்துடன், நாட்டின் நலன், தேசத்தின் நலன், நாம் நம்பும் கொள்கைகளை பாதுகாத்து இந்த ஆண்டு பொது மாநாடு நடத்தப்படுகிறது.
இப்போதும், இலங்கையில் உள்ள ஒவ்வொரு கிராம சேவைக் களமும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
மேலும், பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய அனைவரையும் பிற்பகல் ஒரு மணிக்குள் சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு வந்து நீங்கள் கட்டியெழுப்பிய உங்கள் அரசியல் கட்சியின் பலத்தை வெளிப்படுத்துமாறு அழைக்கின்றோம்.
சதிகள், போராட்டங்கள் மூலம் அச்சுறுத்தல்களாலும் மிரட்டல்களாலும் இந்தக் கட்சியை கவிழ்க்க முடியாது என்பதை நினைவூட்ட வேண்டும். இந்தக் கட்சி மீண்டும் அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு இந்த நாட்டின் தேசிய அரசியலில் தீர்க்கமான சக்தியாக மாறும்.
இந்த நாட்டை கட்டியெழுப்ப நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசியல் சக்தியை கட்டியெழுப்ப எம்முடன் இணைந்து கொள்ளுமாறு இலங்கையின் அனைத்து பொது மக்களையும் கேட்டுக்கொள்கின்றேன்’ என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.