பாடசாலை கட்டிட நிர்மானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து நிறுத்தாதே..! வீதியிலிறங்கிய வவுனியா மாவட்ட மக்களும் பாடசாலை மாணவர்களும்..!

பாடசாலை கட்டிட நிர்மானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து நிறுத்தாதே..! வீதியிலிறங்கிய வவுனியா மாவட்ட மக்களும் பாடசாலை மாணவர்களும்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சாளம்பைக்குளம் அல் அக்ஸா மகாவித்தியாலயம், ஆனைவிழுந்தான் முஸ்லிம் வித்தியாலயத்தின் கட்டிடங்களை புனர்நிர்மானம் செய்வதற்கு ஜனாதிபதி நிதியத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து நிறுத்தப்பட்டமையை கண்டித்து வவுனியா மக்களும், பாடசாலை மாணவர்களும் வீதிக்கு இறங்கி இன்று (18) கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

றிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்த போது நீண்டகால இடம்பெயர்ந்த மக்களுக்காக, மாணவ சமூகத்தினுடைய நடவடிக்கைகளுக்காக கட்டப்பட்ட பல பாடசாலைகளில் 8 பாடசாலைகள் பூரணப்படுத்தப்படாமல் அறை குறையாக கட்டப்பட்ட நிலையில் இருந்தன. அதில் புத்தளம் மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் மன்னார் மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளும் வவுனியா மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளும் பூரணப்படுத்தப்படாமல், இடைநடுவிலே கைவிடப்பட்ட நிலையில் இருந்தன. வழமையாக ஒரு பாடசாலைக் கட்டிடத்தை அரசாங்கம் கட்டிக் கொண்டிருக்கின்ற போது ஆட்சி மாற்றம் வந்தால் அடுத்த ஆட்சியாளர்கள் அதே கட்டிடங்களைப் பூரணப்படுத்திக் கொடுப்பது வழமையாக இருந்துவருகிறது. ஆனால் றிஷாட் பதியுதீன் அமைச்சர் கட்டினார் என்ற ஒரே காரணத்தினால் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் அந்த 8 பாடசாலைக் கட்டிடங்களையும் பூரணப்படுத்தாமல் கிடப்பிலே போடப்பட்ட நிலையில் வைத்திருந்தது.

அவ்வாறு 4 வருடங்களாக பூரணப்படுத்தப்படாமல், இருந்த பொழுது கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதியாக ரணில் விக்கரமசிங்க வந்ததன் பிற்பாடு அவருடைய ஆட்சிக்காலத்தில் இந்த விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் ஜனாதிபதியுடைய கவனத்திற்கு கொண்டுசென்ற போது இதனுடைய தேவையை உணர்ந்த ஜனாதிபதி அவர்கள் இந்த வருட ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்த பாடசாலைக்கட்டிடத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து விலைமனுக்கள் கோரப்பட்டு இதிலே புத்தள மாவட்ட விலைமனுக்கோரல்கள் முடிவுறுத்தப்பட்டுவிட்டன.

மன்னார், வவுனியா மாவட்டத்திற்கான விலைமனுக்கோரல்கள் எதிர்வரும் 27,28 ம் திகதிகளில் முடிவுரும் நிலையில் இருக்கும்பொழுது, இது குறித்து அறிந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான மஸ்தான் அவர்கள் ஜனாதிபதி உட்பட ஆட்சியாளர்களை பலவந்தப்படுத்தி குறித்த வேலைத்திட்டங்களை தடுத்துநிறுத்துமாறு கோரியதற்கிணங்க தற்காலிகமாக இவ் வேலைத்திட்டங்களை நிறுத்துமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கடிதம் அணுப்பப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இது மாணவ சமூகத்திற்கும், பாடசாலை சமூகத்திற்கும் செய்த பெரிய ஒரு துரோகமாகும். எனவே இந்த விடயத்தில் மஸ்தான் அவர்கள் 4 வருடமாக அமைச்சராக இருக்கின்ற போது இவ்வேளையை செய்து கொடுக்க வேண்டிய தார்மீகப்பொறுப்பு அவருக்கு இருந்த பொழுதும், இந்த விடயத்தில் கவனமெடுக்காமல் இருந்துவிட்டு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்கள் இந்த அரசாங்கத்தினூடாக செய்வதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்திய போது அதை தடுத்து நிறுத்த முயற்சி செய்வது நியாயமா என மாணவச் சமூகமும், கல்விச் சமூகமும் அவரிடத்தில் கேட்டுநிற்கின்றது.

எனவே தங்கள் பாடசாலைக் கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து நிறுத்தியமையை கண்டித்து வவுனியா மக்களாலும் பாடசாலை மாணவர்கள், பாடசாலை சமூகத்தினாலும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டதுடன், இதற்கான தீர்வு ஓரிரு நாட்களில் கிடைக்காவிட்டால் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடிவிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை சமூகம், மக்கள் வீதியிலிறங்கி சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எங்களது வாக்குகளைப்பெற்று எங்களது பிள்ளைகளின் கல்வி வளச்சிக்கு இடைரயூரு விளைவித்து குறித்த அபிவிருத்திட்டத்தினை தடுத்து நிறுத்தியதுடன் தான் செய்வதுமில்லாமல் செய்பவர்களை தடுத்து நிறுத்தும் இந்த நாசகார வேலை செய்யும் இராஜாங்க அமைச்சர் மஸ்தான் எமது மாவட்டத்திற்கு வருகை தந்தால் விரட்டியடிப்போம் என்றும் மக்கள் ஆக்ரோசத்தோடு தெரிவித்தனர்.