மக்களின் தொண்டைக்குழிகளுக்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டம் – ரவூப் ஹக்கீம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீர்குலைத்து கருத்து முரண்படுவோரை முடக்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும், இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை அரசாங்கம் நெரிக்க எத்தனிப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் செவ்வாய்க்கிழமை (23) அந்த சட்டமூலத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினரின் ஆட்சேபனைக்கு மத்தியில் கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆராயப்பட்டு, பிரஸ்தாப விவாதத்தை செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் விவாதிப்பதாக தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் விவாதம் இடம்பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது மேலும் கூறியதாவது,
எனக்கு முன் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் மக்களை பாதுகாக்கும் சட்டம் என்று எடுத்துக்காட்ட முயற்சித்தார்.
ஆனால் எதிர்க்கட்சியின் கவனத்தை ஈர்த்துள்ள காரணங்களைப் பார்க்கும்போது அரசு தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் இதனை ஒரு துரும்பு சீட்டாக பாவிக்கின்றது என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகின்றது. அதைத்தான் இப்பொழுது விளக்க போகின்றேன் .
குழுக்களின் பிரதி தலைவர் அவர்களே, மாயாஜாலகாரன் உங்களுக்கு ஏதாவது ஒன்றை காண்பிக்க முயலும் போது அது வெறும் தோற்றப்பாடு மட்டும் தான் என்பது உங்களுக்கு தெரியும். வித்தைக்காரன் பார்வையாளர்களுக்கு போலியான காட்சியை காட்ட எத்தனிப்பதை போன்றே அரசாங்கமும் பொதுமக்களுக்கு காட்ட எத்தனிக்கின்றது . இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உரையாற்றும்போது இள வயது பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது பற்றியும் பெண்களின் நிர்வாண தோற்றம் காட்சிப்படுத்தப்படும் போது அவர்கள் அவமானப்படுவது பற்றியும், அவ்வாறே பலவிதங்களிலும் பொதுமக்களை பாதுகாப்பதற்கு அவசியமான சட்டம் என்றவாறு இதை எடுத்துக்காட்ட முயற்சித்தார்.
இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இந்த சபையில் இருந்து இப்பொழுது வெளியேறுகிறார். அவருக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும் நீங்கள் இள வயதினரையும் பெண்களையும் பற்றி இங்கு கதைத்த போதிலும், உங்களுக்கு தெரியுமா இந்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள 57 பிரிவுகளில் இரண்டு பிரிவுகளில் மட்டும் தான் இளம் வயதினரையும் பெண்களையும் பற்றி குறிப்பிடப்படுகின்றது. எனைய அனைத்தும் இணையத்தளத்தை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதை பற்றி தான் உள்ளன. இணையத்தின் ஊடாக தகவல்களை பரிமாறும் போது அவமானத்துக்குரிய வகையில் அரசியல் ரீதியாக தங்களால் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு விமர்சனங்கள் எழும்போது அவற்றை கட்டுப்படுத்துவதற்காக தான் இந்த முயற்சி என்பது திட்டவட்டமாக தெரிகின்றது .
இது பற்றி உயர்நீதிமன்றத்தில் நீண்ட விவாதம் இடம்பெற்றது . இந்த சட்ட மூலம் அரசியலமைப்புக்கு ஏற்புடையதா என்பதை பற்றி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட போது சட்டமா அதிபர் முரணான 31 பிரிவுகளையும் பற்றி விளக்கமளிப்பதற்கு மூன்று மணித்தியாலங்களை செலவிட்டிருக்கிறார் . இந்த சட்டமூலம் அரசியலமைப்போடு இணங்கி செல்லாத நிலையில் அதனை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு சட்டமா அதிபர் எவ்வாறு அத்தாட்சி படுத்தினார் என்பது புதிராக இருக்கிறது. 57 பிரிவுகளில் 31 பிரிவுகள் அரசியலமைப்ப முரணாக இருந்த போது அதனை தெரிந்து கொண்டே அவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்
இதை நாங்கள் மிக கவனமாக நோக்க வேண்டும். இந்த நாட்டின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தில் எஞ்சியுள்ள சில காப்பீடுகளையும் கூட அப்புறப்படுத்துவதற்கு இந்த சட்டத்தின் ஊடாக அரசாங்கம் எத்தனிக்கின்றது அத்துடன் இந்த நாட்டில் ஜனநாயகத்தை அழித் தொழிக்கப் போகின்றது. மக்களின் விமர்சனத்திற்கு அஞ்சி அரசாங்கம் மக்களை விட்டும் விரண்டோடுகின்றது. அந்த விமர்சனங்களை கட்டுப்படுத்துவதற்காகவே இப்பொழுது இந்த சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளது. கடுமையான தண்டனைகள் விதிக்கப்படப் போகின்றன மக்களை நசுக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்படபப் போகிறது. நிறைவேற்று அதிகாரம் அதனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெளிவாக்கியுள்ளது.
காலையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இந்த வழக்கில் வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம்.பி இந்த சட்டத்தின் 31 திருத்தங்கள் பற்றி விவாதிப்பதற்கு சட்டமா அதிபர் எவ்வாறு பிரயாசை பட்டார் என்பதை கூறி இருந்தார்.
தேர்தல் தொகுதி, தேர்தல் தொகுதி ஒருங்கிணைப்பு என்பனவற்றை கையாள்வதும் இதன் உள்ளார்ந்த நோக்கங்களில் ஒன்றாகும். முன்னால் ஜனாதிபதி தனியார் நிறுவனங்களை ஊடுருவிச் செல்லும் கண்காணிப்பு முறை ஒன்றை ஏற்படுத்தி, அவற்றில் பொருத்தப்படும் கருவிகளின் ஊடாக ஒவ்வொரு பிரஜையையும் உன்னிப்பாக கண்காணிக்கின்ற ஒரு செயல்முறையை தோற்றுவித்திருந்தார்.
இந்தியாவின் பிரபல விமர்சகரான கலாநிதி பரகலா பிரபாகர்(Dr.Parakala Prabakar) அவருடைய “Crooked Timber Of New India” நூலில்
இவ்வாறான சமூக ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்த கூடாது என்றும் அவற்றின் மீது அரசாங்கத்தின் அழுத்தம் பிரயோகிக்கப்படக் கூடாது என்றும் கூறிஇருக்கிறார். தரவுகள், தகவல்கள் திரட்டப்படுவதோடு, உளரீதியான தொல்லைகளும் ஏற்படுத்தப்படுவது பற்றியும் குறிப்பிடுகிறார். சமூக வலைத்தளங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அவர் வலியுறுத்தியிருக்கிறார். வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் இன்று பாரிய யுத்தகளமாக மாறி இருக்கின்றன. அவை அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கின்றன என்கிறார். ஆகவே அரசாங்கம் இவற்றை முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன என்கிறார். அவர் ஒரு நேர் சீரான திறனாய்வாளர் சிறந்த ஒரு விமர்சகராக இந்திய வட்டாரங்களில் அவர் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்லர், இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர்.
இலங்கையில் குற்றச் செயல்களைப் பொறுத்தவரை, ஏற்கனவே உள்ள சட்டங்களைகக் கொண்டே அவற்றைக் கையாள முடியும். அதற்கான ஏற்பாடுகள் அந்த சட்டங்களில் அடங்கியுள்ளன. குற்றவியல் கோவையில் 291,291(A) ,291(B) ,484 ,485 ஆகியவை மூலம் அவற்றை கையாள முடியும் அவ்வாறே ஐ .சி .சி .பி .ஆர். சட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் உள்ளன. ஆனால் அப்பாவி மக்கள் வெளியிட்ட , அப்பாவித்தனமான சில கருத்துக்களுக்காக இந்த சட்டத்தின் ஊடாக தண்டிக்கப்பட்டி ருக்கிறார்கள். உண்மையிலேயே, வெறுப்பூட்டக்கூடிய பேச்சு பேசியவர்கள் இதனால் தண்டிக்கப்படவில்லை. அவர்களுக்கு அரசாங்கத்தின் அனுசரணை இருந்து வந்துள்ளது.
அவ்வாறே கணினி சம்பந்தமான குற்றச் செயல்களுக்கு தண்டிப்பதற்கும் அதற்குரிய சட்டம் வேறாக இருக்கிறது . சில கட்டளை சட்டங்களும் எடுத்துக்கொண்ட சில கட்டங்கள் சட்டங்களும் உள்ளன. மின்னியல் பரிமாற்ற சட்டம் போன்றவையும் உள்ளன .ஆகவே அவ்வாறிருக்கும் பொழுது ஏன் அரசாங்கம் அவசரப்பட்டு இந்த சட்டமூலத்தைகொண்டு வர வேண்டும்?.
உரிய முறையில் குற்ற செயல்களை கையாள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே இருக்கத்தக்கதாக , சட்டமும் ஒழுங்கும் பொறிமுறையும் (Law and Order Machinery) சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறையும் (Law Enforcement Machinery) ஏன் இதில் தலையிட்டு கடும் போக்கை கடைபிடிக்கின்றன?
நேற்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முக்கியஸ்தர்களும் பங்கு பற்றிய ஒரு கலந்துரையாடலில் சிறந்த சட்டத்துறை பேராசிரியர் சாவித்திரி குணசேகர இந்த சட்டமூலம் பற்றி கண்டித்துப் பேசினார் .இந்த சட்ட மூலம் கொண்டுவரப்படுவதன் நோக்கம் சந்தேகத்துக்கு இடமானது என்று அவர் காரசாரமாக விமர்சித்தார்.
இந்த சட்ட மூலம் சிங்கப்பூரின்”Online Falsehood and Manipulation Act” என்ற சட்டத்தின் அடிப்படையில் வரையப்பட்டதாக சம்பந்தப்பட்ட அமைச்சர் கூறுகின்றார். ஆனால், அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டதல்ல. ஆனால் , இங்கு நிலைமை வேறு.
‘அரகலய ‘ வின் எழுச்சியைக் கண்டு அரசாங்கம் வெகுண்டோடுகின்றது அவசர , அவசரமாக இதனை நிறைவேற்றிக் கொள்ளப் போகின்றது . அதாவது இந்த சட்டத்தை அப்பாவி மக்களின் தொண்டைக்குழிகளுக்குள் வலிந்து திணிக்க போகின்றது.
‘கண்ணியப்படுத்துவதுக்காகவே கொண்டு வருகிறோம்; அவர்களை பாதுகாப்பதற்காகவே கொண்டு வருகிறோம் என்று கூறிக்கொண்டு அரசாங்கம் இதனைச் செய்யத் துணிந்திருக்கிறது. ஆணைக்குழுவிற்கு நண்பர்கள் ‘நியமிக்கப்படுவார்கள். நாங்கள் இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களிப்போம் என்றார்.