பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக 31 மனுக்கள் தாக்கல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நான்காவது நாளாக உயர் நீதிமன்றத்தில் நேற்று (31) நடைபெற்றது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரிக்கப்பட்டன.
இந்த மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில ஷரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனக் கோரி இதுவரை சுமார் 31 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர், சோசலிச இளைஞர் சங்கம், முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் துமிந்த நாகமுவ, ஆகியோருடன் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பலர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவால் செய்து உயர் நீதிமன்றத்தில் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.