ரணிலின் முதல் ‘தேர்தல் பிரச்சாரம்’ ஞாயிற்றுக்கிழமை..!

ரணிலின் முதல் ‘தேர்தல் பிரச்சாரம்’ ஞாயிற்றுக்கிழமை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 10ஆம் திகதி குளியாப்பிட்டியவில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

‘நிதர்சனம்’ (Reality) என்ற தொனிப்பொருளில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முதலாவது பொதுக்கூட்டம் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு குளியாப்பிட்டிய நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் முதலாவது பொதுக்கூட்டம் இதுவென ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக செயற்படுவதாக தெரிவித்த அகில விராஜ், ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்த அகில காரியவசம், இறுதியில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்காவில் இருந்து சுமார் 3 மாதங்களின் பின்னர் இலங்கைக்கு நேற்று வருகை தந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, எந்த தேர்தலுக்கும் கட்சியை தயார்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் இருந்து பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்திருந்த நிலையில், அவரைச் சந்திக்க பொதுஜன பெரமுன தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.