டயனாவுக்கு செலவு செய்யப்பட்ட நிதிக்கு பதில் கூறுவது யார்? – இராதாகிருஸ்ணன் எம்.பி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவுக்கு கொடுக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக சட்டம் தன் கடமையை செய்துள்ளதுடன் ஏனையவர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
இது வரை காலமும் அவருக்கான செலவு செய்யப்பட்ட நிதிக்கு யார் பதில் கூறுவார்கள் அல்லது பொறுப்பேற்பார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (8.5.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்பதை நீதிமன்றம் மிகவும் தெளிவாக இந்த தீர்ப்பின் மூலமாக தெரிவித்துள்ளது. காலம் கடந்தாலும் சரியான நேரத்தில் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பானது ஜக்கிய மக்கள் சக்தி கிடைத்த ஒரு வெற்றியாகவும் கருத முடியும். ஏனெனில் ஜக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் டயனா கமகே அந்த கட்சியின் கொள்கைக்கு எதிராக அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்ததுடன் அமைச்சு பதவியையும் ஏற்றுக் கொண்டார்.
இந்த தீர்ப்பின் மூலமாக ஜக்கிய மக்கள் சக்தி இழந்த ஒரு பாராளுமன்ற ஆசனத்தை மீண்டும் பெற்றுக் கொண்டுள்ளது. குறிப்பாக இதுவரை காலமும் இந்த வழக்கு என்ன நடக்கும் என பாரத்துக் கொண்டிருந்த பலருக்கு இந்த தீர்ப்பானது நீதிமன்றத்தின் நடுநிலைமையையும் அதன் தனித்துவத்தை நிருபித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் டயனா கமகேவுக்கு அரசாங்கம் செலவு செய்த நிதியானது எங்களுடைய மக்களின் வரிப்பணமாகும். செலவு செய்யப்பட்ட அந்த பணத்திற்கு பதில் கூறுபவர்கள் யார்? எங்களுடைய நாடு பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ள இந்த காலப்பகுதியில் அன்றாடம் தங்களுடைய குடும்பங்களுக்கு உணவை பெற்றுக் கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலையில் இவ்வாறான பணம் வீனடிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு