O/L பரீட்சை முடிவுகள் வெளியாகும் முன்பே, A/L வகுப்புக்களை ஆரம்பியுங்கள்..!

O/L பரீட்சை முடிவுகள் வெளியாகும் முன்பே, A/L வகுப்புக்களை ஆரம்பியுங்கள்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

தற்போது கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்திற்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் வரை மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களை உயர்தரத்திற்காக அருகிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டாலும், குறிப்பிட்ட பாடத்திட்டம் உரிய பாடசாலையில் கற்பிக்கப்படாவிடின், அப்பாடத்திட்டம் கற்பிக்கப்படும் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் பாடசாலைகள் மூடப்பட்டமையினால், தவறவிடப்பட்ட கல்வி நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை பரீட்சை அட்டவணைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு அமையவே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.