முஸ்லிம் விரோத செயலை முன்னெடுக்கும், செந்தில் தொண்டமானுக்கு எதிராக போராட்டம்..!

முஸ்லிம் விரோத செயலை முன்னெடுக்கும், செந்தில் தொண்டமானுக்கு எதிராக போராட்டம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கிழக்கு மாகாண ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கின்றார். அவர் கிழக்கு மாகாணத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். அதனால் ஜனாதிபதி ஆளுநர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டுமென்றும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளவரின் நியமனத்தை இரத்துச் செய்து கிழக்கு மாகாணத்தில் மரபு ரீதியாக நடைபெற்றுவருவது போன்று வலயக்கல்வி பணிப்பாளர் ஒருவருக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலத்திற்கு முன்னால் சம்மாந்துறை பல கட்சி அரசியல்வாதிகளும், சமூக அமைப்பினரும் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த அமைதிப் போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.மாஹீர், சம்மாந்துறை சூறா சபையின் தவிசாளர் டொக்டர் ஏ.எம்.ஏ. றஸீட் ஆகியோர்கள் அமைதிப் போராட்டகாரர்கள் சார்பில் கருத்துக்களை தெரிவித்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்கள்,

நாங்கள் தமிழ் அதிகாரி ஒருவர் நியமனம் செய்தமையை எதிர்க்கவில்லை. சம்மாந்துறையில் நீர்ப்பாசன திணைக்களம், தொழில்நுட்பக் கல்லூரி, மல்வத்தை கமநல மத்திய நிலையம் போன்ற முக்கிய பல அரச அலுவலகங்களுக்கு பொறுப்பதிகாரிகளாக தமிழ், சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சேவையாற்றி வருகின்றனர். நாங்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியே வருகிறோம். ஆனால் புதிதாக நியமனம் பெற்றுள்ள வலயக்கல்வி பணிப்பாளரை எதிர்ப்பதற்கு காரணம் இவர் திறமையற்றவர். இவரை அவரது பிரதேச மக்களே திறமையற்றவர் என்று வேண்டாமென்று தெரிவித்த நிலையில் சம்மாந்துறைக்கு நியமனம் செய்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும், கிழக்கு மாகாணத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனங்கள், அந்த வலயங்களில் உள்ள பெரும்பான்மையினத்திற்கு அமைவாகவே இதுவரை நடைபெற்று வந்துள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வலயங்களுக்கு தமிழ் அதிகாரியும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள வலயங்களில் சிங்கள அதிகாரிகளும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வலயங்களில் முஸ்லிம் அதிகாரிகளும் கல்விப் பணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த நடைமுறை சம்மாந்துறையிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது. சம்மாந்துறை வலயக் கல்வி பிரதேசம் 90 வீதம் முஸ்லிம்களை கொண்டதாகும். மட்டுமின்றி கிழக்கு மாகாணத்தில் மட்டும் 8 -10 வலயக்கல்வி பணிமனைகளில் கடமைநிறைவேற்று பணிப்பாளர்களே கடமையில் இருக்க ஏன் சம்மாந்துறைக்கும் மட்டும் முந்தியடித்துக் கொண்டு இப்படி ஒரு விடயத்தை மாகாண நிர்வாகம் செய்கிறது என்றனர்.

இதே வேளை, கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதுடன், ஆளுநருக்கு எதிரான கருத்துக்களை தாங்கிய சுலோகங்களும் இந்த போராட்டத்தில் காணப்பட்டன. இவ்வாறு அமைதிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் மேற்படி போராட்டம் பொதுப் போக்குவரத்து மற்றும் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளின் வருகைக்கு தடையாக அமையும் என்பதால் போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த மனுவுக்கு அமைவாக சம்மாந்துறை நீதிவானின் தடையுத்தரவு பொலிஸாரால் வாசிக்கப்பட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மதித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதும் முற்பகல் 11மணியளவில் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் தமது கடமைகளை அலுவலகத்தில் பொலிஸாரின் உதவியுடன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதே வேளை, புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்திற்கு எதிராக சம்மாந்துறை நகர் பிரதேசத்தில் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்குமாறு நேற்று இரவு துண்டு பிரசுரமொன்றின் மூலமாக கோரப்பட்டதும் இன்று காலை முதல் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக சம்மாந்துறை பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.