மன்னார் மாவட்டத்தில் கடும் மழை : வெள்ளம் : சுமார் 8000 பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் கடும் மழை : வெள்ளம் : சுமார் 8000 பேர் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மன்னார் மாவட்டத்தில் கடந்த
வியாழக்கிழமை இரவு முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் பிரதேச மக்கள் அதிகமாக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வழமையான வெள்ள பாதிப்புகளை அதிகமாக அனுபவித்துவரும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரில் சாந்திபுரம், ஜிம்ரோன் நகர் ,எமில் நகர் மக்கள் இம்முறையும் பாரிய பாதிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறித்த பகுதி மக்களின் வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி காணப்படுவதால் எழுத்தூர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தினால் முதியவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த வெள்ள அனர்த்தத்தால் 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 200 குடும்பங்களை சேர்ந்த 774 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

107 குடும்பங்களை சேர்ந்த 351 பேர் பாதுகாப்பான 3 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் க.திலீபன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாகச் சென்று நிலமையை ஆராய்ந்து வருகின்றனர்.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவை வழங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.