டேன் பிரியசாத், மஹிந்த கஹந்தகமவை கைது செய்யுமாறு பிடியாணை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டேன் பிரியசாத், மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (27) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் மீது (கோட்டா கோ கிராமம்) தாக்குதல் நடத்தப்பட்ட வழக்குக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவத்தின் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பிணையில் உள்ள சந்தேகநபர்கள் அனைவரும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
எனினும் இந்த சம்பவத்தில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.
குறித்த சந்தேகநபர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதன்படி, டேன் பிரியசாத், மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மேலதிக அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதுடன், விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக வழக்கை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி மீள அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்