A/L பரீட்சையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று (04) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை நவம்பர் 27ஆம் திகதி முதல் 06 நாட்களுக்கு ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
பரீட்சை அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இன்று முதல் பரீட்சை நடவடிக்கைகள் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, முன்னதாக வெளியிடப்பட்ட அட்டவணைப்படி இன்று முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும்.
பரீட்சை இடம்பெறாத தினங்களுக்கு டிசம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை பரீட்சை நடைபெறும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதிய அட்டவணை அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் டிசம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை வழங்கப்படும்.
இதேவேளை, தொடர்ந்தும் வீதிகள் தடைப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பிள்ளைகள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.