பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
பொதுமக்களின் வாக்குகளால் கணிசமான சதவீத பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை சிறந்த வெற்றியாகும் – கௌரவ பிரதமர் தெரிவிப்பு
இந்நாட்டிலுள்ள சகல பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு – ஒன்றியத்தின் தலைவர் தெரிவிப்பு
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். அவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்மலி குணசிங்க முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுஷ்கா திலகரத்ன வழிமொழிந்தார்.
அத்துடன், பெண் பாராளுன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக இருவர் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமிந்திரானி பண்டார கிரிஎல்லே அவர்கள் பிரதி இணைத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், இவருடைய பெயரை கௌரவ ரோஹினி விஜேரத்ன அவர்கள் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ துஷாரி ஜயசிங்க வழிமொழிந்தார். மேலும் மற்றுமொரு பிரதி இணைத்தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்மலி குணசிங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கிருஷ்ணன் கலைச்செல்வி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே வழிமொழிந்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், பொதுமக்களின் வாக்குகளால் குறிப்பிடத்தக்க வீதமான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது சிறந்த வெற்றியாகும் என்றார். எனவே, அரசியல் வேறுபாடுகள் இன்றி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் செயற்பட வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவது ஒன்றியத்தின் நோக்கம் என இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
அத்துடன், ஒன்றியத்தால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இரு துணைத் தலைவர்கள் தலைமையில் உபகுழுவொன்று அமைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி விஜேரத்ன அவர்களின் பரிந்துரைக்கு அமைய பாலின அடிப்படையில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான தினத்தை எதிர்வரும் 06ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி விஜேரத்ன, சமன்லி குணசிங்க, சமிந்திரானி பண்டார கிரிஎல்லே, தீப்தி வாசலகே, துஷாரி ஜயசிங்க, ஒஷானி உமங்கா, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, லக்மாலி ஹேமச்சந்திர, கீதா ஹேரத், ஹிருனி விஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, சாகரிக்கா அதாவுத, எம்.ஏ.சி.எஸ்.சதுரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தை, நிலாந்தி கொட்டஹச்சி, ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.