மதுபான அனுமதிப்பத்திரம் குறித்து ரணில் அறிக்கை!

மதுபான அனுமதிப்பத்திரம் குறித்து ரணில் அறிக்கை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை எனவும், இதனூடாக அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க மதுபான அனுமதிப்பத்திரங்களை அரசியல் இலஞ்சமாக பெற்றுக் கொடுத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்த வேளையில், கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு அமையவே முன்னாள் ஜனாதிபதி சகல கலால் அனுமதிப்பத்திரங்களையும் வழங்கியிருந்தார் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த முறைக்கு புறம்பாக ஒரு கலால் அனுமதிப்பத்திரம் கூட வழங்கப்படவில்லை எனவும், புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பின்பற்றப்பட்ட முறையின் சட்டபூர்வமான தன்மையை தேர்தல்கள் ஆணைக்குழு 2024 ஓகஸ்ட் 19 ஆம் திகதி கலால் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

முறையான வருமானம் ஈட்டும் கலால் உரிமங்களை தொடரவோ அல்லது ரத்து செய்யவோ தற்போதைய அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டுகிறது

COMMENTS

Wordpress (0)