ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று

ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியின் முதலாவது வெளிநாட்டு விஜயத்தை ஆரம்பித்து, நேற்று (15) மாலை சுமார் 5.30 மணியளவில் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானம் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.

அங்கு, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இராஜதந்திரிகள் குழுவினர் ஜனாதிபதியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அதன்பிறகு, ஜனாதிபதி, இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்திய – இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் ஜனாதிபதிக்கும் இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள்அமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இலங்கைக்கு அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பது, விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நாட்டில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இடையேயான சந்திப்பில், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை மேம்பாடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் அன்னியோன்யமான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து இந்திய பாதுகாப்பு  ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதியை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து  கலந்துரையாடினார்.

இதற்கிடையில், இன்று ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்குப் பிறகு, ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்த உள்ளார்.

பின்னர் ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இருதரப்பு கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டு ஊடக அறிக்கை வௌியீடு இடம்பெறவுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி மற்றும் இந்திய துணை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை ராஷ்டிரபதிபவனில் இடம்பெறவுள்ளது.

COMMENTS

Wordpress (0)