மின் கட்டண திருத்தம் – வாய்மொழி கருத்து கோரல் ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து வாய்மொழியாக கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது அமர்வு இன்று மத்திய மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இது இடம்பெறவுள்ளது.
புத்தாண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பராமரிக்க வேண்டும் என்று சமீபத்தில் மின்சார சபை முன்மொழிந்திருந்தது.
இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பதில் யோசனைகளை முன்வைத்து, மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.
இந்த யோசனைகள் தொடர்பில் கடந்த 17ஆம் திகதி முதல் பொது மக்களிடமிருந்து எழுத்துமூலமான கருத்துக்கள் பெறப்பட்டதுடன், இன்று முதல் ஜனவரி 10ஆம் திகதி வரை 9 மாகாணங்களையும் உள்ளடக்கி வாய்மொழி கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கமான 0772 943 193க்கு தொடர்பு கொண்டு பதிவு செய்ய முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் கருத்துகளைப் பெற்ற பின்னர் ஜனவரி 17ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர்
ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.