அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய விலை தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும் – வர்த்தகம், உணவு பாதுகாப்பு அமைச்சர்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய விலை தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும் – வர்த்தகம், உணவு பாதுகாப்பு அமைச்சர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விவசாயிகளும், நுகர்வோரும் பயனடையும் வகையில் தான் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரிசியின் கட்டுப்பாட்டு விலை திருத்தம் செய்யப்படமாட்டாது. தற்போதைய  கட்டுப்பாட்டு விலை தொடர்ந்து அமுல்படுத்தப்படும். கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் தரப்பினருக்கு எதிராக கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என  வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06)  நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் பதிலளித்ததாவது,

சந்தையில்  நிலவும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக நாடளாவிய ரீதியில்   தினசரி சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஓரிரு மாதங்களில் சந்தையில் திட்டமிட்ட வகையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு அதை காரணமாக கொண்டு அரிசியின் விலை  அதிகரிக்கப்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்காகவே அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நுகர்வோர் அதிகார சபை விதித்தது.

விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இறக்குமதி செய்யப்படும்   ஒரு கிலோகிராம் பச்சையரிசியின்  சில்லறை விலை 210 ரூபா, நாடு அரிசியின் விலை  220 ரூபா, சம்பா அரிசியின் விலை 230 ரூபா என்ற  அடிப்படையில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது.

அதேபோல் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும்  ஒரு கிலோகிராம்  பச்சையரிசியின் விலை 220 ரூபா, நாடு அரிசியின் விலை 230 ரூபா, சம்பா அரிசியின் விலை 240 ரூபா,கீரி சம்பாவின் விலை 260 ரூபா என்ற அடிப்படையில்  கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கான உத்தரவாத விலை 120 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான  நெல் ஆலைகள் தற்போது இராணுவத்தின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படுகின்றன. பெரும்போக விவசாயத்தில் அதிகளவான நெல்லை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே எதிர்வரும் காலங்களில் அரிசி தட்டுப்பாடு  ஏற்படாது என்றார்.

இதனைத்  தொடர்ந்து எழுந்து மேலதிக கேள்விகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை பற்றி பேசுகிறார். நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதாகவும் குறிப்பிடுகிறார். ஆனால் நடைமுறை அதற்கு மாற்றீடாக காணப்படுகிறது.  நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிப்பது தாமதப்படுத்தப்பட்டதால் ஒருசில மாகாணங்களில் விவசாயிகளிடமிருந்து பிரதான அரிசி உற்பத்தியாளர்களே  நெல்லை நியாயமற்ற விலைக்கு கொள்வனவு செய்துள்ளார்கள்.

கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாகவே சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிடுகிறார். இலங்கை மத்திய வங்கி 2025.02.03 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் சில்லறை விலை 240 ரூபா, நாடு அரிசியின் விலை 250  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தம்புள்ளை பகுதியில்  240 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டிய அரிசி 243 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லுக்கான உத்தரவாத விலையை 130  ரூபாவாக நிர்யணிக்குமாறு விவசாயிகள் வலியுறுத்திய போதும்  120 ரூபாவாக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த அமைச்சர்  வசந்த சமரசிங்க,  கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு  அரிசியை விற்பனை செய்யும் தரப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுகர்வோர் அதிகார சபை தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் சுற்றிவளைப்புக்களும் மேற்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரின் நலனை கருத்திற் கொண்டு தான் நெல்லுக்கான உத்தரவாத விலை 120 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை திருத்தம் செய்யப்படமாட்டாது.தற்போதைய  கட்டுப்பாட்டு விலை தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும் என்றார்

COMMENTS

Wordpress (0)