
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று ஜெனீவாவுக்கு பயணமானது. இந்த குழுவினர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் பங்குபற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நட்பு நாடுகளுடனான பிரதிநிதிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
மனித உரிமை பேரவையின் கடந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான வரைவினை கடுமையாக எதிர்ப்பதற்கும், பேரவையின் 51/1 பிரேரணையை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
அத்துடன், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிப்பதற்கும் தீர்மானித்திருந்தது.
அதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்குத் தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக உறுதியளித்துள்ளது.
அதேநேரம், அமெரிக்கா விலகியமையை சுட்டிக்காட்டி, 51/1 நகல்வடிவையும், இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் வலுவிழக்க வைக்கும் கோரிக்கையை ஜெனிவாவில் முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.