
பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்துடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியது; பாகிஸ்தானும் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேற்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராவல்பிண்டி தேசிய விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஏ குழுவுக்கான 4ஆவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
இந்தப் போட்டி முடிவுடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியதுடன் வரவேற்பு நாடனான பாகிஸ்தானுடன் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேறுகின்றன.
பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் மைக்கல் ப்றேஸ்வெல் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் ரச்சின் ரவிந்த்ரா குவித்த சதமும் நியூஸிலாந்தை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.
பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 237 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
எவ்வாறாயினும் நியூஸிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. வில் யங் (9), கேன் வில்லியம்சன் (5) ஆகிய இருவரும் முதல் 4 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (15 – 2 விக்.)
இந் நிலையில் டெவன் கொன்வே (30), ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர்.
தொடர்ந்து ரச்சின் ரவிந்த்ரா, டொம் லெதம் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.
ரச்சின் ரவிந்த்ரா 105 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 112 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்த வருடம் இதுவரை நடைபெற்ற 6 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளிலும் சதம் குவிக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.
ரவிந்த்ராவைத் தொடர்ந்து டொம் லெதம் 55 ஓட்டங்களுடன் வெளியேறினார். (214 – 5 விக்.)
அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட 23 ஓட்டங்களை க்லென் பிலிப்ஸ் (21 ஆ.இ), மைக்கல் ப்றேஸ்வெல் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.
முன் வரிசையிலும் மத்திய வரிசையிலும் ஆறு வீரர்கள் துடுப்பாட்டத்தில் வழங்கிய சிறந்த பங்களிப்பு பங்களாதேஷுக்கு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது.
தன்ஸித் ஹசன் (24), அணித் தலைவர் நஜ்முல் ஹசன் ஷன்டோ ஆகிய இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தன்ஸித் ஹசன் ஆட்டம் இழந்ததுடன் சீரான இடைவெளியில் மெஹிதி ஹசன் மிராஸ் (13), தௌஹித் ரிதோய் (7), முஷ்பிக்குர் ரஹிம் (2) மஹ்முதுல்லா (4) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.
இதனிடையே தௌஹித் ரிதோயுடன் 3ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்ளையும் ஜாக்கர் அலியுடன் 6ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களையும் பகிர்ந்த ஷன்டோ 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
மத்திய வரிசையில் ஜாக்கர் அலி 45 ஓட்டங்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 26 ஓட்டங்களையும் தஸ்கின் அஹ்மத் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஜாக்கர் அலி 8ஆவது விக்கெட்டில் தஸ்கின் அஹ்மத்துடன் 35 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
பந்துவீச்சில் மைக்கல் ப்றேஸ்வெல் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வில் ஓ’றூக் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: மைக்கல் ப்றேஸ்வெல்