
சட்டவிரோத மின்சாரத்தால் மற்றொரு உயிர் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பளை, குருந்துவத்த பகுதியில் காணாமல் போன ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட வயல்வெளியில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய குறித்த நபர், நேற்று இரவு முதல் காணாமல் போயிருந்தார்.
இந்த மரணம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், விலங்குகளை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி அவர் உயிரிழந்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குருந்துவத்தை – பெல்லப்பிட்டி பகுதியில் நிகழ்ந்துள்ளது.
காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக அப்பகுதியில் உள்ள ஒருவர் மின்சார கம்பிகளைப் பயன்படுத்தி இந்த பொறியை அமைத்துள்ளதாகவும், அதற்காக அருகிலுள்ள வீட்டிலிருந்து மின்சாரம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இறந்த நபர் தனது வீட்டிற்கு குடிநீரை இந்த கைவிடப்பட்ட வயல்வெளியில் இருந்து பெறும் நிலையில், அதனை பார்வையிட சென்ற போது, அவர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கம்பளை, குருந்துவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.