
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) வாழ்த்துச் செய்தி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “இஸ்ரேலின் எந்த ஈனச்செயல்களும் முஸ்லிம்களின் ஈமானை அழித்துவிடாது; இறுதி வெற்றியும் எமக்கே” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
சர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலேயே, முஸ்லிம்கள் இம்முறை புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாட நேர்ந்துள்ளதாகவும் நெருக்கடிகள் நீங்கி, நிம்மதி ஏற்பட இந்நாளில் பிரார்த்திக்கும்படியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
“முஸ்லிம்களுக்கு எதிரான ஸியோனிஸவாதிகளின் அத்துமீறல்கள் எல்லைமீறியுள்ளன. காஸாவில் ஈவிரக்கமின்றி இனவழிப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இஸ்ரேலிய அரசு, முழு முஸ்லிம்களையும் ஆத்திரமூட்டியுள்ளது. இவர்களின் கொடூரங்கள் இல்லாதொழிய அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்!
ஈமானின் பலத்திலும் பக்குவத்திலும் இந்நேரத்தில் நாம் அணிதிரள்வதே முஸ்லிம் சமூகத்துக்கு பாதுகாப்பாக அமையும். முஸ்லிம்களின் ஈமானை எந்த இராணுவ நடவடிக்கைகளாலும் அழிக்க முடியாது. இதற்கு காஸா மக்கள் சிறந்த அத்தாட்சி. இருப்பைப் பலப்படுத்த இஸ்ரேல் மேற்கொள்ளும் ஈனச்செயல்களும் இழி செயல்களும் இறுதியில் மண்கவ்வவே செய்யும். “இறுதி வெற்றி எமக்கே!” என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் உள்ளோம்.
அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்து நோன்பு நோற்று, நல்லமல்கள் செய்த நாம், ஈமானின் பக்குவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நெருக்கடிகள், சோதனைகளின்போது பொறுமை மற்றும் தொழுகையுடன் உதவி தேடுவதே சிறந்தது. ரமழானின் பக்குவங்கள் நமது முன்னேற்றப் பாதைகளுக்கு உறுதியாக அமையட்டும்.
எமது நாட்டு அரசியல் போக்குகளும் ஆரோக்கியமாகத் தென்படவில்லை. அரச உயர்மட்டத்தில், திரைமறைவில் அரங்கேற்றப்படும் முஸ்லிம் விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும். சமூகங்களை நேசிக்கின்ற மற்றும் மத நம்பிக்கைகளை கௌரவப்படுத்துகின்ற நிலைப்பாட்டுக்கு இந்த அரசாங்கம் வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.