டிரம்பின் வரியைத் தவிர்க்க ஹர்ஷவின் பரிந்துரை

டிரம்பின் வரியைத் தவிர்க்க ஹர்ஷவின் பரிந்துரை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   டிரம்பின் வரி பிரச்சினையை சமாளிக்க இலங்கை பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Corporation economic partnership – RCEP) சேர வேண்டும் என்றும், அணுகுமுறைகள் மாறாவிட்டால் நாடு முன்னேற முடியாது என்று நேற்று (06) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் உட்பட உலகின் மிகப்பெரிய பொருளாதார பிராந்தியமாக மாறி வரும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (RCEP) இலங்கை சேர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

RCEP-யில் சேருவதற்கு நிபந்தனைகள் இருப்பதாகவும், நிபந்தனைகளுக்கு இணங்காமல் அந்த பிராந்தியக் குழுவில் சேர முடியாது என்றும் அவர் கூறினார்.

இதற்காக பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டுத்தாபன ஒப்பந்தம் (Economic and technology corporation agreement ETCA) மற்றும் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்திருந்தார்.

அதற்கு மனப்பான்மைகள் மாற வேண்டும் என்று அவர் கூறினார்.

இவற்றை எவ்வாறு செய்வது என்பது குறித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ‘வரைபடம்’ அதன் பொருளாதார பார்வையில் உள்ளது என்று அவர் கூறினார்.

அதேபோல், அமெரிக்காவால் விதிக்கப்படும் வரிக்காகக் காத்திருக்காமல் மார்ச் 6 ஆம் திகதி முதல், அதைக் குறைப்பதற்கான ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அறிக்கைகள் பயனற்றதாகக் கருதப்பட்டதாகவும், விதிக்கப்பட்ட வரிகளை விசாரிக்க இப்போது ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அமெரிக்க வரிகள் விதிப்பது தொடர்பாக இந்தியாவும் பிற நாடுகளும் எவ்வாறு செயல்பட்டன என்பதை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு விளக்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்திருந்தார்.