
ஈஸ்டர் குண்டுத் தாக்குல்; விடயங்கள் குறித்து புலனாய்வுத் துறைகள் இன்னும் கவனம் செலுத்தவில்லையாம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 5 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஏப்ரல் (21) அன்றும் கூட, பல துறைகளில் விசாரணைகள் இல்லாதது மற்றும் மூளையாக செயற்பட்டவரை அடையாளம் காண்பதில் தடைகள் உள்ளதாக சமூக மற்றும் மத மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ரோஹன் சில்வா கூறுகிறார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக முன்னர் வெளியிடப்படாத ஐந்து உண்மைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டால் பல முக்கியமான தகவல்கள் வெளிப்படும் என்றும், புலனாய்வு சேவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்ததால் விசாரணைக் குழுக்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் அருட்தந்தை ரோஹன் சில்வா கூறுகிறார்.
இதற்கிடையில், சமூக மற்றும் மத விவகார மையத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் உறுப்பினரான ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்தன, தனது குழுவின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டால் பல தகவல்கள் வெளிப்படும் என்று கூறுகிறார்.
வெளிநாட்டில் இருந்தபோது செனல் 4 இல் அசாத் மெளலானா வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் தாக்குதலுக்கு முன்னர் எச்சரிக்கைகள் குறித்து செயற்படத் தவறியது தொடர்பான உண்மைகள் குறித்து புலனாய்வுக் குழுக்கள் கவனம் செலுத்தவில்லை என்றும் பத்திரிகையாளர் தரிந்து ஜெயவர்தன கூறுகிறார்.
தெஹிவளை ட்ராபிகல் இன்னில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அப்துல் லத்தீப் முகமது ஜமீல், சஹ்ரானுடன் தொடர்புடைய அபுஹிந்த், கல்முனை சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் நடந்த தாக்குதலின் போது தப்பி ஓடியதாக சந்தேகிக்கப்படும் சாரா ஜாஸ்மின் எனப்படும் புலஸ்தி மகேந்திரன், சாய்ந்தமருது குண்டுவெடிப்பு உள்ளிட்ட உண்மைகள் குறித்து புலனாய்வுத் துறைகள் இன்னும் கவனம் செலுத்தவில்லை என்றும் ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்தன கூறுகிறார்.
அதிக தகவல்களை வெளிக்கொணரும் சாத்தியக் கூறுகள் இருந்த போதிலும், இந்த விடயங்களில் கவனம் செலுத்தப்படாதது, மூளையாகச் செயற்படும் நபரைப் பாதுகாக்கும் சதித்திட்டத்தின் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், இந்த 5 விடயங்களில் புலனாய்வு அதிகாரிகள் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று பத்திரிகையாளர் தரிந்து ஜெயவர்தனவும் கேட்டுக்கொள்கிறார்.
சமூக மற்றும் சமய மையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன இவ்வாறு தெரிவித்தார்.