
நெல் விலையில் இனி ஒருபோதும் பிரச்சினை ஏற்படாது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மீண்டும் ஒருபோதும் நெல் விலை தொடர்பில் பிரச்சினை ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, நெல் களஞ்சியசாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதோடு, அதற்காக 500 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாங்கள் தயாராகிவிட்டோம். 3 இலட்சம் மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட களஞ்சியசாலைகளை புதுப்பித்துள்ளோம். நெல் கொள்வனவுக்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம், பாழடைந்து கிடந்த களஞ்சியசாலைகளை மறுசீரமைக்க நிதி ஒதுக்கினோம். முதலாவது நடவடிக்கையாக நெல் கொள்வனவுக்காக நெல் கொள்வனவு சபைக்கு 500 கோடி நிதி வழங்கினோம். சதொச மேலும் நெல் கொள்வனவுக்காக திட்டமொன்றை வகுத்தது. இதை விடக் குறைந்த விலையில் கொடுத்தாலும் பரவாயில்லை, இதை விட அதிக விலையில் கொடுத்தாலும் பரவாயில்லை, ஆனால் அதிக விலையில் அரசியை விற்பனை செய்ய முடியாது என நாங்கள் சொன்னோம். அதற்கு நாங்கள் கட்டுப்பாட்டு விலையை வழங்கியுள்ளோம். குறைந்த விலையிலான அனைத்து நெல்லையும் அரசாங்கம் விலைக்கு வாங்கும். விவசாயிகள் இனி தங்கள் நெல்லை விற்க முடியாது என்று முறைப்பாடு செய்யத் தேவையில்லை. விலைகளை நிலைப்படுத்த அரசாங்கம் தலையிடத் தயாராக உள்ளது.
நெல் விலை குறைந்தால் அதை வாங்குவோம். அதிகரித்தால் அவர்கள் வாங்குவார்கள். அரசாங்கத்துக்கு அவற்றை வாங்கி சேமித்து வைக்க வேண்டிய தேவை இல்லை. விவசாயிகளுக்கான நியாயமான விலையை வழங்குவதே எங்களது நோக்கம். அந்த திட்டம் வெற்றியளித்துள்ளது. இனி விவசாய உற்பத்திகளை அற்ப விலைக்கு விற்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.