
விரைவில் மின் கட்டண திருத்தம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், அது தொடர்பான பிரேரணையை மே மாதத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுடம் சமர்ப்பிக்க வேண்டுமென அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையைப் பெற்ற பிறகு, 3 முதல் 6 வாரங்களுக்குள் இது தொடர்பில் ஆராய்ந்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதன் தீர்மானத்தை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் தொடர்புடைய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமும் யோசனைகள் கேட்கப்படும்.
மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது, அதன்படி, எதிர்வரும் காலப்பகுதியில் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இலங்கை மின்சார சபை இதுவரை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் பொருத்தமான பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடத்திற்கான முதலாவது மின் கட்டண திருத்தம் ஜனவரி 17 ஆம் திகதி இடம்பெற்றதோடு, அப்போது மின் கட்டணங்களை 20 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.