
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை கொத்மலை வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜனக சோமரத்ன தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான பேருந்து தற்போது கொத்மலை பொலிஸ் மைதானத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், கதிர்காமம் டிப்போவின் விசாரணை அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் இன்று (12) பேருந்து தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அங்கு சென்றிருந்தனர்.
பேருந்தை ஆய்வு செய்து, பின்னர் வழங்கப்படும் அறிக்கைகள் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும், இந்த விபத்து தொடர்பில் புதன்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொத்மலை பொலிஸ் பரிசோதகர் வஜிர தேவப்பிரிய தெரிவித்தார்.