
வீதி அதிகார சபை தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு வீதி அதிகாரசபையில் தற்காலிகமாகப் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று (20) பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி பூங்கா வரை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டது.
வீதி அதிகாரசபையில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட 141 ஊழியர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்த போதிலும், அவர்கள் இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை. எனவே, அவர்களை நிரந்தரமாக்கக் கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் சுரேஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, நகரிலுள்ள பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்துக்கு அருகில் பகல் 12.00 மணியளவில் ஒன்றுகூடிய தற்காலிக ஊழியர்கள், “அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்கு”, “14 நாள் மருத்துவ விடுப்பு வழங்கு”, “ஏனைய ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை எங்களுக்கும் வழங்கு”, “ஜனாதிபதியே எங்களை நிரந்தரமாக்கு” போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு காந்தி பூங்காவை நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலமாகச் சென்று, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்ற பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.