
ரயில் சேவைகளில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கான காரணம் வௌியானது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக, திணைக்களத்தின் சேவைகளைப் பராமரிப்பதில் அவ்வப்போது தடைகள் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 430 ரயில் சாரதிகள் தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போது ரயில்வே திணைக்களத்தில் 275 சாரதிகளே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் திணைக்களத்தில் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என்றும், இதன் காரணமாக, திணைக்களத்தின் சேவைகளைப் பராமரிப்பதில் சில சிக்கல்கள் எழுவதாகவும் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய கடந்த மார்ச் மாதம் அனுமதி பெறப்பட்டதாகவும், அதன்படி தற்போது விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதன்படி, பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் ஜூலை முதல் வாரத்தில் ரயில்வே சேவைக்கான ஆட்சேர்ப்புத் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போது பணிபுரியும் ரயில் சாரதிகளின் எண்ணிக்கை காரணமாக, மேலதிக ரயில் சேவைகளுக்கு 275 பேரை பணியமர்த்த வேண்டியுள்ளது என்றும், அவர்கள் எப்போதாவது விடுமுறை எடுத்தால், ரயில் சேவையை பராமரிப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போன்ற நிலைமையே ஏற்பட்டதாகக் கூறிய ரயில்வே பொது முகாமையாளர், சுமார் 20 ரயில் சாரதிகள் பணிக்கு வராததால் ரயில்வே திணைக்களத்தால் பல ரயில் சேவைகளை இரத்து செய்ய வேண்டியிருந்தது என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ரயில் சேவையை மீண்டும் வழமைக்கு கொண்டு வர ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.