
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்த பொதுமக்களை விழிப்புணர்வு செய்யும் திட்டம் இன்று (14) முதல் தொடங்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் ஒரு வார காலத்திற்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் அதிகரித்து வருவதால் இந்த விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
“இன்று பிரமிட் திட்டங்களின் பரவல் அதிகரித்துள்ளது. இதற்கு பலரின் அறியாமையே காரணம். இதன் காரணமாகவே இலங்கை மத்திய வங்கியானது கல்வி அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு, இலங்கை பொலிஸ், முப்படை தலைமையகம் மற்றும் பொதுப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் ஆதரவுடன், இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் மூலமாகவும், பிரமிட் திட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்கான விழிப்புணர்வு வாரத்தை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விழிப்புணர்வு திட்டத்தில் இணைந்து, பிரமிட் திட்டங்களின் பாதகமான விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். மேலும், பிரமிட் திட்டங்களை தவிர்ப்பது தொடர்பில் மற்றவர்களுக்கும் அறிவுறுத்துங்கள். இதேபோல், முதலீட்டு நிதிகள், கிரிப்டோ நிறுவனங்கள் மற்றும் கல்வி செயற்றிட்டம் போன்றவைகள் ஊடாக அங்கீகரிக்கப்படாத வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை இந்த நாட்களில் அதிகரித்து வருகிறது. இந்த நாட்டிலிருந்து பல்வேறு முதலீடுகள் என்ற போர்வையில் அங்கீகரிக்கப்படாத வைப்புகளை ஏற்றுக்கொள்ளும் பிரமிட் திட்டங்களையும் மோசடி செய்பவர்களையும் முற்றிலுமாக ஒழிக்க உங்கள் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்தார்.