தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இராணுவ மோதல்

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இராணுவ மோதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இன்று 24 அதிகாலையில் ஆயுதமேந்திய மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்கள் தெரிவித்துள்ளன.

பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்திற்குப் பிறகு, முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இரு நாட்டு இராணுவங்களும் ஒன்றின் மீது மற்றொன்று பழி சுமத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் தாய்லாந்து நாட்டவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும், இரு தாய்லாந்து படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய டா மோன் தாம் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் கம்போடியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது. கம்போடியா ஒரு கண்காணிப்பு வானூர்தியைப் பயன்படுத்திய பின்னர் கனரக ஆயுதங்களுடன் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியதாகவும் தாய்லாந்து இராணுவம் தெரிவித்தது.

கம்போடியத் தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், தாய்லாந்துப் படைகளின் தூண்டுதலற்ற அத்துமீறல் இருந்ததாகவும் கம்போடியப் படைகள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

கம்போடியாவுக்கான தனது தூதரை ஜூலை 23ஆம் திகதி தாய்லாந்து திரும்ப அழைத்த பின்னரும், ஒரு வாரத்திற்குள் சர்ச்சைக்குரிய பகுதியில் இரண்டாவது தாய்லாந்து இராணுவ வீரர் கண்ணிவெடியால் ஒரு காலை இழந்ததைத் தொடர்ந்து, பேங்காக்கில் உள்ள கம்போடியத் தூதரை வெளியேற்றுவதாக அது கூறிய பின்னரும் இந்த மோதல் ஏற்பட்டது.

COMMENTS

Wordpress (0)