
ரணில் கைது! நாட்டின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த கைது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை சொல்லி வருகின்றனர். எங்களுடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது, உண்மையிலேயே மக்களுடைய பணத்தை வீண் விரயமாக்குவதை தடுத்து நிறுத்தி, மக்களுக்கு கூடுதலான சேவைகளை செய்து வருகின்றது என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பனை அபிவிருத்தி சபையால் பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும் கடந்த (23) யாழ். சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
பனை அபிவிருத்தி சபை தலைவர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட பனை அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இதன்போது, அமைச்சரால் பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதோடு, கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“ரணில் விக்கிரசிங்க மாத்திரமல்ல இன்னும் பலர் உள்ளே செல்லக்கூடியவர்களாக இருக்கின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இந்த நாடு வங்குரோத்து அடைந்த நாடு என அறிவிக்கப்பட்டது.
வங்குரோத்து என அறிவிக்கப்பட்ட நாட்டில், தங்களுடைய அப்பாவினுடைய சொத்து என நினைத்து, மக்களுடைய பணமான 166 இலட்சத்தை வீணடித்துள்ளனர். சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர். அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
அதனுடைய விளைவாகவே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார். இதுவரை இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் உயரத்தில் இருப்பவர்கள், மேட்டுக்குடிகள், அவர்களிடையே நெருங்க முடியாது எனக் கூறப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க என்பவர் பெரிய நரியர், பெரிய தந்திரக்காரர், பெரிய மூளைசாலி, பலசாலி என்பது அவருக்கு பின்னால் உலகமே இருக்கின்றது எனக் கூறி, ரணில் விக்கிரமசிங்க மீது கை வைக்க முடியாது என்றெல்லாம் கூறப்பட்டது.
ஆனால், நாங்கள் அவர் மீது கை வைக்கவில்லை. இந்த நாட்டிலுள்ள நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
இதுநாள் வரை நாட்டின் சட்டத்தை இந்த நாட்டிலுள்ள மேட்டுக்குடிகள் தங்களுடைய பைகளுக்குள் வைத்திருந்தனர். ஆனால், இன்று நீதித்துறை சுயாதீனமாக இயங்கக்கூடிய நிலைக்கு வந்துள்ளது. நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதற்கான அனுமதி மற்றும் சுதந்திரத்தை வழங்கியுள்ளோம்.
அந்த சுயாதீன நீதிமன்றம், சுயாதீனமாக விசாரணை செய்து, மக்களுடைய பணத்தை கொள்ளையடித்தது யாராக இருந்தாலும், அவர்களுடைய தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த நடவடிக்கையின் ஒன்றாகவே, முழு நாட்டில் இருக்கின்ற பழைய அரசியல்வாதிகள், நாட்டில் கொள்ளையடித்தவர்கள் என எல்லோரும் நடுங்குகின்ற அல்லது அச்சமடைகின்ற ஒரு கைதாகவே இந்த ரணில் விக்கிரமசிங்கவின் கைது அமைந்துள்ளது” என்றார்.