
சமூக கட்டமைப்பில் இல்லற வாழ்வு..!
(சுஐப் எம்.காசிம்-) – பூரண வாழ்க்கைத் திட்டமுள்ள மார்க்கம் இஸ்லாம். மனிதனின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு தடையாக எதுவும் இந்த மார்க்கத்தில் இல்லை. படைத்து பரிபாலிப்பவன் இறைவன் என்ற நம்பிக்கையிலே முஸ்லிம்கள் இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர். இதனால், இறைவன் விதித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப ஒரு முஸ்லிம் வாழ வேண்டியுள்ளது.
இந்த நியதிகளில் திருமணமும் ஒன்று. பருவ வயதுக்கு வந்த முஸ்லிமான ஆணும், பெண்ணும் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டுமென்பது இஸ்லாத்தின் எதிர்பார்ப்பு. இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளதால், எல்லோருக்கும் இது கட்டாயமாக்கப்படவும் இல்லை. தனியாகப் பிறக்கும் மானிடனை சமூகமாக பிணைக்கும் அத்திவாரமே திருமணம். திருமணங்களால் உருவாகும் குடும்பங்களே கடைசியில் சமூகமாகின்றன. பாலியல் ஒழுக்கத்துக்கு வழிகாட்டும் பிரதான வாயிலான திருமணம், மனிதனை பல்வேறு சிந்தனைகளால் பக்குவப்படுத்துகிறது.
உடல்ரீதியான சகல தகைமைகள் இருந்தும் சிலரின் பொருளாதார நிலைகள், திருமண பந்தத்தில் இணையும் வாய்ப்புக்கு இடையூறாகவுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்து ஏழை, எளியவர்களையும் குடும்ப வாழ்க்கையில் இணைப்பது சமூகத்தின் பொறுப்பாகும். இந்த அடிப்படையில்தான், சமூகத்தின் அரசியல் தலைமை என்ற அந்தஸ்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், இருபது இளம் ஜோடிகளை இல்லற வாழ்க்கையில் இணைத்துள்ளார்.
காணி, மொழி, வாழிடம் மட்டும் சமூகத்துக்கான உரிமையில்லை. வாலிப உள்ளங்களை குடும்பமாக இணைத்து, சமூகத்துடன் பிணைப்பதும் அரசியல் தலைமைக்குள்ள பொறுப்பாகிறது. உரிமைக் குரல்களாக ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் கட்சிகள், சமூகத்தை பலப்படுத்தும் குடும்பங்களை உருவாக்க வேண்டும். இந்த சிந்தனைக்கு வித்திட்டிருக்கிறது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் முயற்சிகள். பொதுவாக நாட்டின் முதல் வரலாறாகவே இது நோக்கப்படவுள்ளது. இதுபோன்றுதான், எளிய குடும்பத்திலுள்ள முஸ்லிம் சிறார்களுக்கு “கத்னா” விருத்தசேதனம் செய்து வைப்பதையும் இந்த அரசியல் தலைமைகள் கருத்திற்கொள்ளட்டும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நாசர் அல் அமேரி பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட “மவத்தா வரஹ்மா” எனும் திட்டத்தின் கீழான, புத்தளத்தில் நிகழ்ந்த இத்திருமண நிகழ்வுகள் பலரது சிந்தனைகளுக்கும் விருந்தளித்துள்ளன. ஓஎச்ஆர்டி (OHRD) அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. இதற்கான அனைத்து அனுசரணைகளும் அஷ் ஷெய்க் மஹ்மூத் பாதிஹ் அலி அவர்களால் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் முஸ்லிம் தலைமைகளுக்கான அங்கீகாரத்தை அரபு நாடுகள் வழங்கத் தயாராக உள்ளதை, இவரது ஆர்வம் வௌிப்படுத்துகிறது. இதுதவிர, கடந்த காலங்களில் 120 வீடுகள், பள்ளிவாசல், தனியார் கடைகளை உள்ளடக்கிய “சயிட்சிட்டி” நகரும் இவரது உதவியால்தான் நிர்மாணிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமைதாங்கிய இவ்வினிய நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். உலமாக்கள், திருமணப் பதிவாளர்கள் மற்றும் மணமகன், மணமகள் சார்பிலான குடும்பத்தவர்கள் உள்ளிட்டோருடன் சமூகத்தின் பல்துறை சார்ந்தோரும் பங்குபற்றி, புதுமணத்தம்பதிகளை வாழ்த்தியதுடன், இந்நிகழ்வின் காரணகர்த்தாக்களுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.
புதுமணத்தம்பதிகளின் இல்லற வாழ்க்கை எதிர்நீச்சலின்றி ஆரம்பமாக வேண்டுமென்ற நோக்கில், தலா ஒவ்வொரு குடும்பங்களுக்கும் மூன்று இலட்சம் ரூபா வழங்கப்பட்டதுடன், வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலான அறநெறியிலான பிரசங்கத்தை டாக்டர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.முபாரக் (மதனி) நிகழ்த்தியிருந்தார். அத்துடன், புத்தளம், மன்ப உஸ் சாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் அல் ஹாபிழ் ஏ.எம்.ரியாஸ் அவர்களின் நிக்காஹ் சிறப்புப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.