
புதிய அமைச்சர்களின் அமைச்சுகளை குறிப்பிட்டு வௌியான வர்த்தமானி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்தின் படி புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க நேற்று (11) அதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.
10 ஆம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்படி மூன்று புதிய அமைச்சர்களும் 10 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.
அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பணியாற்றிய பிமல் ரத்நாயக்க அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் நகர அபிவிருத்தி அமைச்சராக அன்றைய தினம் நியமிக்கப்பட்டார்.
பிமல் ரத்நாயக்கவிடமிருந்து நீக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, முன்னர் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பணியாற்றிய அனுர கருணாதிலகவிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனுர கருணாதிலக்கவிடம் இருந்து நீக்கப்பட்ட வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சானது பிரதி அமைச்சராகப் பணியாற்றி வந்த கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர முன்னர் எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்காத கலாநிதி கௌசல்ய அரியரத்ன, தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜெயவீர மற்றும் எம்.எம்.ஐ. அர்காம் ஆகியோரும் பிரதி அமைச்சர்களாக பதவியேற்றிருந்த நிலையில் அவர்களது பொறுப்புகள் தொடர்பிலும் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளது.